சிறுவாணி அணை சாலை சீரமைக்கப்படுவது எப்போது? பராமரிப்பு பணிக்கு செல்ல முடியாமல் அதிகாரிகள் அவதி


சிறுவாணி அணை சாலை சீரமைக்கப்படுவது எப்போது? பராமரிப்பு பணிக்கு செல்ல முடியாமல் அதிகாரிகள் அவதி
x
தினத்தந்தி 22 Sep 2018 10:26 PM GMT (Updated: 22 Sep 2018 10:26 PM GMT)

சிறுவாணி அணை சாலை மழைக்கு பலத்த சேதம் அடைந்துள்ளது. அது சீரமைக்கப்படாததால் பராமரிப்பு பணிக்கு செல்ல முடியாமல் அதிகாரிகள் அவதி அடைந்துள்ளனர்.

கோவை,

கேரளாவில் கடந்த மாதம் பெய்த பலத்த மழையால் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அப்போது கேரளாவில் அமைந்துள்ள சிறுவாணி அணைக்கு செல்லும் சாலை சேதம் அடைந்தது. கோவையில் இருந்து சிறுவாணி அணை 37 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. இதில் தமிழக எல்லையான சாடிவயலில் இருந்து கேரள பகுதியில் 12 கிலோ மீட்டர் தூரத்தில் சிறுவாணி அணை அமைந்து உள்ளது. சாடிவயலில் இருந்து சிறுவாணி அணைக்கு செல்ல பொதுமக்களுக்கு அனுமதி கிடையாது. கேரளப் பகுதியில் அமைந்துள்ள சிறுவாணி அணையில் இருந்து தினமும் தண்ணீர் எடுக்கப்பட்டு கோவைக்கு வினியோகிக்கப்படுகிறது.

சிறுவாணி அணையில் இருந்து தண்ணீர் எடுக்கும் பணியை தமிழ்நாடு குடிநீர்வடிகால் வாரியம் மேற்கொண்டு வருகிறது. இதனால் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அடிக்கடி சிறுவாணி அணைக்கு செல்வார்கள். ஆனால் சமீபத்தில் பெய்த பலத்த மழைக்கு சிறுவாணி அணைக்கு செல்லும் சாலை மிகவும் மோசமாக பாதிப்படைந்துள்ளது. சில இடங்களில் சாலையில் பிளவு ஏற்பட்டு பல அடி இடைவெளிக்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. சில இடங்களில் சாலையில் மண் சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அணைக்கு ஜீப் போன்ற வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அணையின் அன்றாட நீர்இருப்பை கூட அறிந்து கொள்ள முடியவில்லை.தேவையான பாராமரிப்பையும் செய்ய முடியவில்லை.

இதுகுறித்து கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘சிறுவாணி அணைக்கு செல்லும் சாலையை பராமரிக்கும் பொறுப்பு கேரளாவிடம் தான் உள்ளது. அவர்கள் தான் சாலையை சீரமைக்க வேண்டும். அதுவரை அங்கு வாகனங்கள் செல்ல முடியாது என்றார்.

சிறுவாணி அணை கட்டப்பட்டு பல ஆண்டுகள் ஆவதால் அதில் பல இடங்களில் கசிவு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. அந்த கசிவை அடைப்பது குறித்து தற்போது கேரள பொதுப்பணித்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள். கடந்த மாதம் தொடர் மழை பெய்ததால் இந்த பணிகள் சிறிது பாதிக்கப்பட்டது. தற்போது மழை இல்லாததால் ஆய்வு பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அணையின் கசிவை எந்த தொழில்நுட்ப ரீதியில் அடைக்கலாம் என்பது முடிவு செய்யப்பட்ட பின்னர் கசிவை அடைக்கும் பணிகள் நடைபெற உள்ளதாக கோவை மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறினார்.


Related Tags :
Next Story