பிரமாண்ட ஊர்வலமாக சென்று விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது
மும்பையில் இன்று ஆனந்த சதுர்த்தியையொட்டி விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டு நீர்நிலைகளில் கரைக்கப்படுகிறது.
மும்பை,
மும்பையில் விநாயகர் சதுர்த்தி விழா கடந்த 13-ந் தேதி முதல் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வந்தது. 10 நாட்கள் வழிபாட்டிற்கு பிறகு இன்று (ஞாயிற்றுக்கிழமை) விநாயகர் சிலைகள் மும்பையில் நீர்நிலைகளில் கரைக்கப்பட உள்ளன.
ஏற்கனவே ஏராளமான மக்கள் 1½, 3, 5 மற்றும் 7-வது நாள் வழிபாட்டிற்கு பிறகு வீடு மற்றும் மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகரை நீர்நிலைகளில் கரைத்தனர். இந்தநிலையில் பெரும்பாலான மண்டல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்ட விநாயகர் சிலைகள், வீடுகளில் வைக்கப்பட்டு இருந்த சிலைகள் இன்று ஆனந்த சதுர்த்தி அன்று கரைக்கப்பட உள்ளன.
இன்று மட்டும் மும்பை லால்பாக் ராஜா உள்ளிட்ட முக்கிய மண்டல்களின் விநாயகர் சிலைகள் உள்பட சுமார் 1 லட்சம் விநாயகர் சிலைகள் கரைக்கப்பட உள்ளன. இதற்காக மாநகராட்சி சார்பில் கடற்கரைகள், ஏரிகள், செயற்கை குளங்கள் என 168 இடங்களில் பிரமாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. விநாயகர் சிலைகள் பிரமாண்ட ஊர்வலத்துடன் கரைக்க எடுத்து செல்லப்படுவதால், மும்பை நகரமே திருவிழா கோலம் கண்டுள்ளது. வீதியெங்கும் மின் அலங்காரங்களாலும், வளைவுகளாலும் அலங்கரிக்கப்பட்டுள்ளன.
இதற்காக மும்பையில் பலத்த போலீஸ் பாதுகாப்பிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. சுமார் 50 ஆயிரம் போலீசாா் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் தவிர கடற்படையினர், வெடிகுண்டு நிபுணர் பிரிவினர், கலவர தடுப்பு பிரிவனர், ஊர்காவல் படையினர், அதிவிரைவு படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
போலீசார் கடற்கரை பகுதிகள் தவிர நகர் முழுவதும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் கடற்கரைகளில் லட்சக்கணக்கில் மக்கள் வருவார்கள் என்பதால் அங்கு உயர் கோபுரங்களை அமைத்து போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகின்றனர். நேற்று விநாயகர் சிலைகள் கரைக்கப்படும் முக்கிய கடற்கரை பகுதிகளான கிர்காவ், ஜூகு, தாதர், வெர்சோவா ஆகிய இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை நடத்தினர். இதேபோல போலீசார் நேற்று இரவு முழுவதும் நகரில் தீவிர வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
இதேபோல போலீசார் கடற்கரை பகுதிகளில் குட்டி விமானம் மூலம் கண்காணிப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுகுறித்து போலீஸ் துணை கமிஷனர் மஞ்சுனாத் சிங்கே கூறியதாவது:-
இதுவரை பயங்கரவாத அச்சுறுத்தல் எதுவும் இல்லை. கிர்காவ், ஜூகு, சிவாஜிபார்க் கடற்கரை மற்றும் லால்பாக் ராஜா மண்டலில் குட்டி விமானம் மூலம் கண்காணிக்க உள்ளோம். பாதுகாப்பு பணியில் போலீசாருடன் என்.எஸ்.எஸ்., என்.சி.சி. மாணவர்களும் போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தும் பணியில் ஈடுபடுவார்கள். எந்த தகவலையும் உறுதிப்படுத்தாமல் பொது மக்கள் வதந்திகளை நம்ப வேண்டாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story