மாவோயிஸ்டுகள் நடமாட்டம் எதிரோலி கூடலூர் –கேரள எல்லையில் வாகன சோதனை தீவிரம்
மாவோயிஸ்டுகள் நடமாட்டம் எதிரொலியால் கூடலூர்– கேரள எல்லையில் வாகன சோதனையில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
கூடலூர்,
கேரள மாநிலம் மலப்புரம், வயநாடு, பாலக்காடு, கண்ணனூர் ஆகிய மாவட்ட வனப்பகுதிகளில் மாவோயிஸ்டுகள் பதுங்கி உள்ளதாக கண்டறியப்பட்டுள்ளது. இதனால் அவர்களை பிடிக்கும் பணியில் கேரள தண்டர்போல்ட் போலீசார் ஈடுபட்டுள்ளனர். கடந்த 2016–ம் ஆண்டு கூடலூரை ஒட்டியுள்ள கேரளமாநிலம் நிலம்பூர் வனப்பகுதியில் பதுங்கி இருந்த மாவோயிஸ்டுகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தினர். இதில் 2 பேர் சுட்டு கொல்லப்பட்டனர். மீதமுள்ள மாவோயிஸ்டுகள் தப்பி ஓடினர்.
இந்த நிலையில் கடந்த 2 மாதங்களாக கூடலூர்–கேரள எல்லையான வழிக்கடவு, நிலம்பூர், சுல்தான்பத்தேரி பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. தொடர் கனமழை காரணமாக வனத்தில் பதுங்கி இருக்க முடியாமல் மாவோயிஸ்டுகள் தங்களது இருப்பிடங்களை அடிக்கடி மாற்ற வேண்டிய இக்கட்டான நிலை ஏற்பட்டது. இதனால் அத்தியாவசிய பொருட்களுக்காக கிராமங்களுக்குள் மாவோயிஸ்டுகள் வந்து சென்றனர். நேற்று முன்தினம் வயநாடு மாவட்டம் மானந்தவாடி அருகே பஞ்சார கொல்லி பகுதியில் 4 மாவோயிஸ்டுகள் அப்பகுதிக்கு வந்தனர்.
தோட்ட தொழிலாளர்களை சந்தித்து அவர்களிடம் இருந்து உணவு பொருட்களை பிடுங்கி சென்றனர். இது குறித்து கிராம மக்கள் மானந்தவாடி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் போலீசார் வருவதற்குள் மாவோயிஸ்டுகள் அங்கிருந்து தப்பி ஓடி தலைமறைவாகினர். இருப்பினும் கேரள பகுதியில் போலீசார் உஷார்படுத்தப்பட்டனர்.
மேலும் ரோந்து பணியும் தீவிரப்படுத்தப்பட்டது. இதைத்தொடர்ந்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா உத்தரவின் பேரில் கூடலூர்– கேரள எல்லையான நாடுகாணி, சேரம்பாடி, தாளூர், பாட்டவயல், ஓவேலி உள்ளிட்ட அனைத்து சோதனைச்சாவடிகளிலும் போலீசார் வாகன சோதனை நடத்தினர்.
நீலகிரி வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இல்லை என மறுப்பு தெரிவித்த போலீசார், வாகன சோதனையை கடந்த 2 தினங்களாக தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர். மேலும் வாகனங்களில் சந்தேகப்படும்படியான நபர்கள் இருந்தால் அவர்களின் பெயர் விவரம் மற்றும் அடையாள அட்டைகளை காண்பிக்குமாறு ஆய்வு நடத்தி வருகின்றனர்.
இதேபோல் கிராமப்புறங்களில் புதிய நபர்களின் நடமாட்டம் இருந்தால் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுக்க வேண்டும் என பொதுமக்களை போலீசார் கேட்டு கொண்டுள்ளனர்.