கருணாஸ் கைது விவகாரத்தில் சட்டம் கடமையை செய்துள்ளது - பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை கருத்து
கருணாஸ் கைது விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்துள்ளது என்று பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் கூறினர்.
ராஜபாளையம்,
பா.ஜனதா கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் ராஜபாளையத்தில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொள்ள வந்த மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அவர் கூறியதாவது:–
சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் கருணாசுக்கு அதிக பொறுப்பு உண்டு. மிக மோசமான முறையில் அவர் கருத்து தெரிவித்திருந்தது ஏற்புடையதல்ல. அவர் தனது கருத்துக்கு வருத்தம் தெரிவித்த பின்னர் இந்த பிரச்சினை தீர்ந்து விடும் என எதிர்பார்த்தேன். சாதி, மதம், மொழி ரீதியான பிரச்சினை ஏற்படும் என்பதால் அவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார். இந்த விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்திருக்கிறது. எச்.ராஜா பிரச்சினையில் அவர் நீதிமன்றத்தின் மூலமாக வழக்குகளை சந்திப்பார்.
இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
பா.ஜனதா மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று காலை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்கு வந்து சாமி தரிசனம் செய்தார். இதைத்தொடர்ந்து அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–
பிரதமரால் தொடங்கி வைக்கப்பட்டுள்ள காப்பீட்டு திட்டம் வெற்றி பெற சிறப்பு வழிபாடு நடத்த வந்தேன். இந்த திட்டத்தில் தமிழக அரசு இணைந்ததற்கு நன்றி தெரிவிக்கிறேன். தமிழகத்தில் சிலை திருட்டு அதிகரித்து விட்டது. போலி சிலைகளை வழிபடுகிறோமோ என்ற சந்தேகம் பக்தர்களின் மனதில் எழுந்து விட்டது. இந்துசமய அறநிலைய துறை கோவில்களை விட்டு வெளியேற வேண்டும் என்பதே எங்களின் நிலைப்பாடு. முதல்–அமைச்சரில் இருந்து கடை நிலை ஊழியர் வரை வரம்பு மீறி யார் பேசினாலும் தவறு தவறுதான். கருணாசை பொறுத்தவரை அவர் பலமுறை இவ்வாறு பேசியிருக்கிறார். அவர் மீது அரசு சட்டப்படி நடவடிக்கை எடுத்து இருக்கிறது.
எச்.ராஜா தம் மீதான வழக்கை நீதிமன்றத்தில் சட்டப்படி எதிர்கொள்வார். விநாயகர் சிலை ஊர்வலத்தை அரசியலாக்குகிறார்கள். வரும் தேர்தலில் தி.மு.க.வுக்கு மக்கள் தக்க பாடம் புகட்டுவார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
தேசிய குழு உறுப்பினர் இல.கணேசன் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘சாதி வெறி மங்கி வரும் நிலையில் கருணாஸ் இப்படி பேசியதை ஏற்க முடியாது. நீதிமன்றங்களை ஆர்.எஸ்.எஸ். தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கிறது என ராகுல் பேசியிருப்பது நீதிமன்றத்திற்கு எதிரானது’’ என்று கூறினார்.