வெறுப்பு அரசியல் வேண்டாம்: அன்பால் அரவணைப்போம் - நமச்சிவாயம் அறிவுறுத்தல்
வெறுப்பு அரசியல் வேண்டாம், அனைவரையும் அன்பால் அரவணைப்போம் என்று இளைஞர் காங்கிரசாருக்கு அமைச்சர் நமச்சிவாயம் அறிவுறுத்தினார்.
புதுச்சேரி,
புதுவை கம்பன் கலையரங்கில் மாநில இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு இளைஞர் காங்கிரஸ் மாநில தலைவர் ரமேஷ் தலைமை தாங்கினார்.
விழாவில் புதுவை காங்கிரஸ் தலைவரும், பொதுப்பணித்துறை அமைச்சருமான நமச்சிவாயம் பேசியதாவது:–
ராகுல்காந்தியின் லட்சியத்தை நிறைவேற்ற நாம் இங்கு கூடியுள்ளோம். அவரது விருப்பப்படி இளைஞர் காங்கிரஸ் தேர்தல் புதுவையில் அமைதியாக நடந்தது. தேர்தல் முடிந்தபின் இளைஞர் காங்கிரஸ் முழு எழுச்சி பெற்று உள்ளது.
பொதுமக்களை அவதிக்குள்ளாக்கிய பெட்ரோல், டீசல் விலையேற்றத்தை கண்டித்து நடத்தப்பட்ட முழுஅடைப்பு போராட்டம் வெற்றிபெற்றது. ரபேல் போர் விமான பேர ஊழல் போராட்டத்தில் திரண்டவர்களை கண்டு புதுவை மக்கள் இன்றும் பேசுகிறார்கள். இந்த இளைஞர்படை ராகுல்காந்தியின் பின்னால் அணிவகுக்கும்.
இன்றைய ஊர்வலத்தின் மூலம் எதிர்க்கட்சிகளுக்கு ஒரு செய்தியை சொல்லி உள்ளீர்கள். 2019–ல் ராகுல்காந்தியை அரியணையில் அமர்த்துவது உறுதி என்பதுதான் அது. அவர் கைகாட்டுபவரை நாம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற செய்யவேண்டும். இதற்காக இப்போதே சபதம் எடுத்துக்கொள்ள வேண்டும். வெறுப்பு அரசியல் நமக்கு வேண்டாம். அன்பால் அனைவரையும் அரவணைப்போம்.
இவ்வாறு அமைச்சர் நமச்சிவாயம் பேசினார்.
முன்னதாக இளைஞர் காங்கிரஸ் புதிய நிர்வாகிகள் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள வந்த அகில இந்திய இளைஞர் காங்கிரஸ் தலைவர் கேசவ் சந்த் யாதவ், துணைத்தலைவர் ஸ்ரீனிவாஸ், செயலாளர் ஜெபி மேத்தர், தமிழர் தலைவர் ஹசன் ஆகியோருக்கு இளைஞர் காங்கிரசார் கோரிமேடு எல்லையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
அவர்களை அங்கிருந்து இரு சக்கர வாகனங்களில் ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது தலைவர்களின் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள். ஊர்வலத்தில் சிலம்பாட்டம், ஒயிலாட்டம், மஸ்கிராத் உள்ளிட்ட பல்வேறு கலைநிகழ்ச்சிகள் இடம் பெற்றன.