வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு


வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 23 Sep 2018 10:30 PM GMT (Updated: 23 Sep 2018 9:26 PM GMT)

வாக்காளர் பட்டியல் தொடர்பான சிறப்பு முகாமை கலெக்டர் ஆய்வு செய்தார்.

கரூர்,

கரூர் மாவட்டத்தில் கடந்த 1-ந்தேதி முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வருகிற அக்டோபர் மாதம் 31-ந்தேதி வரை இந்த பணிகள் நடக்கிறது. இந்த காலத்தில் செப்டம்பர் மாதம் 9, 23-ந்தேதிகளிலும், அக்டோபர் மாதம் 7, 14-ந்தேதிகளிலும் அனைத்து வாக்குசாவடி மையங்களிலும் சிறப்பு முகாம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன் பேரில் நேற்று கரூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட கரூர் கோட்டைமேடு அரசு உயர்நிலைப்பள்ளி, தாந்தோன்றிமலை அரசு கல்லூரி, கணபதிபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி என மொத்தம் 4 சட்டமன்ற தொகுதிகளுக்கு உட்பட்ட 1,031 வாக்குசாவடி மையங்களிலும் வாக்காளர் பட்டியலில் பெயர்சேர்ப்பு, நீக்கல், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடந்தது.

இதில் கரூர் காந்திகிராமம் புனித தெரசா பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கரூர் நகராட்சி ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டமேடு உயர்நிலைப்பள்ளிகளில் நடைபெற்ற வாக்காளர் பட்டியல் சுருக்க முறை திருத்த சிறப்பு முகாமினை கலெக்டர் அன்பழகன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது வாக்காளரிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்களின் எண்ணிக்கை எவ்வளவு? இளம் வயதினர் ஆர்வத்துடன் வருகை தருகிறார்களா? என்பது குறித்து கேட்டறிந்தார்.

பின்னர் கலெக்டர் நிருபர்களிடம் கூறுகையில், 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ந்தேதி அன்று 18 வயது நிரம்பிய தகுதியுள்ள அனைவரும் தங்கள் பெயர்களை புதிய வாக்காளராக பட்டியலில் சேர்க்க படிவம் 6-ஐ பூர்த்தி செய்து விண்ணப்பங்களை அளிக்கலாம். இது போல் இறந்தவர்களின் பெயரை நீக்குதல், முகவரி மாற்றம் செய்தல் உள்ளிட்டவற்றை மேற்கொள்வதற்கும் சில படிவங்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம். இதுவரை விண்ணப்பிக்காதவர்கள் அக்டோபர் மாதத்தில் நடக்கும் சிறப்பு முகாமில் கலந்து கொண்டு விண்ணப்பிக்கலாம் என்று கூறினார். இந்த ஆய்வின்போது கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, கரூர் தாசில்தார் ஈஸ்வரன் உள்பட பலர் உடனிருந்தனர்.

Next Story