மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்


மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் மதுபாட்டில்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 23 Sep 2018 10:00 PM GMT (Updated: 23 Sep 2018 10:32 PM GMT)

விழுப்புரம் அருகே மண்ணில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 3 ஆயிரம் மதுபாட்டில்களை டாஸ்மாக் பறக்கும் படையினர் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக பெண் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

விழுப்புரம், 


விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த சிலர் புதுச்சேரியில் இருந்து மதுபாட்டில்கள் மற்றும் எரிசாராயத்தை கடத்தி வந்து விற்பனை செய்வதாக திருச்சி மண்டல டாஸ்மாக் அதிகாரிகளுக்கு தொடர்ந்து புகார்கள் சென்றது. அதன்அடிப்படையில் டாஸ்மாக் துணை ஆட்சியர் ராஜூ தலைமையிலான 7 பறக்கும்படையினர் விழுப்புரம் மாவட்டத்தில் மதுபாட்டிகள் மற்றும் எரிசாராயத்தை பதுக்கி வைத்து விற்பனை செய்பவர் களைபிடித்து சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையங்களில் ஒப்படைத்து வருகிறார்கள்.
இந்த நிலையில் ராஜூ தலைமையிலான பறக்கும் படையினருக்கு விழுப்புரம் அடுத்த கப்பூர் கிராமத்தில் பெண் ஒருவர் தனது வீட்டில் அட்டைபெட்டிகளிலும், மண்ணில் புதைத்து வைத்தும் மதுபாட்டில்களை விற்பனை செய்து வருவதாக ரகசிய தகவல் கிடைத்தது.

தகவலின்பேரில் டாஸ்மாக் பறக்கும்படையினர் கப்பூருக்கு விரைந்து சென்று, குறிப்பிட்ட அந்த பெண்ணின் வீட்டுக்குள் அதிரடியாக நுழைந்து சோதனை நடத்தினர். அப்போது அங்கு ஏராளமான மதுபாட்டில்களுக்கான காலி அட்டைபெட்டிகள் கிடந்தது. இதனால் சந்தேகமடைந்த பறக்கும் படையினர் வீட்டின் அருகே மதுபாட்டில்கள் மண்ணில் புதைத்து வைக்கப்பட்டுள்ளதா? என தோண்டி பார்த்தனர். அப்போது மண்ணில் சாக்கு மூட்டைகளில் 3 ஆயிரம் மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதையடுத்து அங்கிருந்த மதுபாட்டில்கள் அனைத்தையும் பறிமுதல் செய்ததோடு, மதுபாட்டில்களை புதுச்சேரியில் இருந்து கடத்தி வந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த சீனுவாசன் மனைவி ஆண்டாள்(வயது 55) என்பவரை பிடித்து விழுப்புரம் மதுவிலக்கு அமல்பிரிவு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். இதையடுத்து ஆண்டாளை மதுவிலக்கு அமல் பிரிவு போலீசார் கைது செய்தனர்.பறிமுதல் செய்யப்பட்ட மதுபாட்டில்களின் மதிப்பு ரூ.4 லட்சம் இருக்கும் என்று டாஸ்மாக் பறக்கும் படையினர் தெரிவித்தனர். 

Next Story