தொகுப்பு வீடுகள் கட்டி தரக்கோரி ஆதிவாசி மக்கள் மனு
ஊட்டியில் நடந்த மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் தொகுப்பு வீடுகள் கட்டி தரக்கோரி ஆதிவாசி மக்கள் மனு அளித்தனர்.
ஊட்டி,
ஊட்டியில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் இன்னசென்ட் திவ்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் குறைகளை மனுக்களாக அளித்தனர். அதன்படி கூடலூர் அருகே வாழக்கொல்லி குரும்பர் காலனியை சேர்ந்த பெட்ட குரும்பர் இனத்தை சேர்ந்த ஆதிவாசி மக்கள் தொகுப்பு வீடுகள் கட்டி தரக்கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:–
குரும்பர் காலனியில் பெட்ட குரும்பர் இன ஆதிவாசி மக்கள் 25 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். அந்த காலனியில் 14 தொகுப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டு உள்ளது. மற்றவர்கள் மண் குடிசையில் வாழ்ந்து வருகிறார்கள். அந்த குடிசை விரிசல் விழுந்து இடிந்து விழும் அபாய நிலையில் காணப்படுகிறது. மேலும் மழைக்காலங்களில் உள்ளே தண்ணீர் ஒழுகுவதால், நாங்கள் குழந்தைகளை வைத்து அவதி அடைந்து வருகின்றோம். குடிசையின் மேற்பகுதியில் தார்பாயை போட்டு மழைக்காலங்களில் பாதுகாப்பாக இருந்து வருகிறோம். இருந்தாலும், தொகுப்பு வீடுகள் கட்டி தரப்பட வில்லை. எனவே, ஆதிவாசி மக்களின் நலனை கருத்தில் கொண்டு தொகுப்பு வீடுகள் கட்டி தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
மக்கள் குறைதீர்க்கும் கூட்டத்தில் குடும்ப அட்டை, வீட்டுமனை பட்டா, முதியோர் உதவித்தொகை, சாலை, குடிநீர், கழிப்பிடம் உள்ளிட்ட 194 கோரிக்கை மனுக்கள் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்டது. இந்த மனுக்கள் மீது சம்மந்தப்பட்ட அலுவலர்கள் பரிசீலனை செய்து தகுதி இருப்பின் உரிய நடவடிக்கை மேற்கொள்ள கலெக்டர் உத்தரவிட்டார். மந்தாடா பகுதியில் அரசு பஸ் விபத்தில் உயிரிழந்த பெங்களூரை சேர்ந்த ஜெயஸ்ரீ என்பவரின் குடும்பத்தினருக்கு முதல்–அமைச்சரின் விபத்து நிவாரண நிதியில் இருந்து ரூ.2 லட்சத்துக்கான காசோலை,
மண் சரிந்து உயிரிழந்த பிங்கர்போஸ்ட் பாரதிநகர் பகுதியை சேர்ந்த சிராஜூதீன் என்பவரின் குடும்பத்தினருக்கு முதல்–அமைச்சரின் நிவாரண நிதியில் இருந்து ரூ.50 ஆயிரத்துக்கான காசோலை, பைக்காரா நீர்வீழ்ச்சியில் மூழ்கி உயிரிழந்த குன்னூர் அறையட்டியை சேர்ந்த ஷோபனா என்பவரது மகள்கள் சந்தியா, மதுமிதா ஆகியோருக்கு மாவட்ட ஆட்சியரின் விருப்புரிமை நிதியில் இருந்து கல்வி உதவித்தொகை ரூ.40 ஆயிரத்துக்கான காசோலை வழங்கப்பட்டது. இதில் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) முருகன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.