அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான மந்தாடாவில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மும்முரம்


அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான மந்தாடாவில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மும்முரம்
x
தினத்தந்தி 25 Sept 2018 3:45 AM IST (Updated: 25 Sept 2018 12:51 AM IST)
t-max-icont-min-icon

ஊட்டி– குன்னூர் சாலையில் அரசு பஸ் கவிழ்ந்து விபத்துக்குள்ளான மந்தாடா என்ற இடத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

ஊட்டி,

மலை மாவட்டமான நீலகிரியில் பெரும்பாலான சாலைகள் ஏற்ற, இறக்கத்துடன் காணப்படுகிறது. மலைப்பாதைகள் வளைந்து, நெளிந்து செல்கின்றன. ஊட்டி–குன்னூர் சாலையில் மந்தாடா என்ற இடத்தில் கடந்த ஜூன் மாதம் 14–ந் தேதி கட்டுப்பாட்டை இழந்த அரசு பஸ் ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் கண்டக்டர் உள்பட 9 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் படுகாயம் அடைந்தனர். மீண்டும் இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதை தவிர்க்க மந்தாடாவில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஊட்டி–குன்னூர் சாலையில் குண்டும், குழியுமான இடங்களை சீரமைக்க வேண்டும் என்று வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தி வந்தனர். அதனை தொடர்ந்து விபத்து நிகழ்ந்த இடத்தில் தற்காலிகமாக தடுப்பு கம்பிகள் அமைக்கப்பட்டன. மேலும் தேசிய நெடுஞ்சாலைத்துறை சார்பில் மந்தாடாவில் சுமார் 3½ கிலோ மீட்டர் தூரத்துக்கு குண்டும், குழியுமான சாலை சீரமைக்கப்பட்டு, புதிய தார்ச்சாலை போடப்பட்டது.

இந்த நிலையில் தற்போது மந்தாடாவில் சாலையோரத்தில் தடுப்புச்சுவர் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. அதன்படி கான்கிரீட் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதன் மூலம் விபத்துகள் ஏற்படுவது தவிர்க்கப்படும்.

இதுகுறித்து தேசிய நெடுஞ்சாலைத்துறை உதவி கோட்ட பொறியாளர் சாமியப்பன் கூறும்போது, மந்தாடாவில் சாலையின் உறுதி தன்மை பாதுகாப்பாக இருக்கும் வகையில் சாலையோரத்தில் தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டு வருகிறது. இதேபோன்று மற்றொரு இடத்திலும் தடுப்புச்சுவர் அமைக்கப்படுகிறது. இதற்காக ரூ.40 லட்சம் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது என்றார்.


Next Story