மணல் கடத்தல் வாகனங்களை விடுவிக்கக் கூடாது- கலெக்டர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு


மணல் கடத்தல் வாகனங்களை விடுவிக்கக் கூடாது- கலெக்டர்களுக்கு மதுரை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு
x
தினத்தந்தி 25 Sept 2018 4:00 AM IST (Updated: 25 Sept 2018 1:21 AM IST)
t-max-icont-min-icon

மணல் கடத்தலின்போது பிடிபடும் வாகனங்களை விடுவிக்கக்கூடாது என்று மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டு உள்ளது.

மதுரை,

புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் பகுதியை சேர்ந்த மகாலிங்கம் என்பவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

எங்கள் கிராமத்தின் அருகில் வெள்ளாறு ஆறு உள்ளது. இந்த ஆற்றின் நீரை நம்பி ஓரளவுக்கு விவசாய பணிகளை செய்து வருகிறோம். குடிநீருக்காகவும் இந்த ஆற்றைத்தான் நம்பி உள்ளோம். இந்த நிலையில் வெள்ளாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் வெள்ளாற்றை நம்பி உள்ள கிராம மக்களின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகி உள்ளது.

மணல் திருட்டால் விவசாயம் பாதிக்கப்படுவதுடன், குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும் அபாயம் உள்ளது. இதுபற்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அனுப்பினேன். எந்த பதிலும் இல்லை. எனவே வெள்ளாற்றில் சட்டவிரோதமாக மணல் அள்ளுவதற்கு தடை விதித்து உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகள் பதில் அளிக்க ஏற்கனவே ஐகோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.

இந்தநிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

முடிவில், நீதிபதிகள் பிறப்பித்த இடைக்கால உத்தரவு வருமாறு:–

ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக பாதிக்கிறது. இரவு, பகலாக மணல் திருட்டு நடப்பதால், இயற்கை வளங்கள் சூறையாடப்படுகிறது. இதனால் எதிர்காலங்களில் இந்தியாவில் பெரும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் நிலை உள்ளது என்று மத்திய அரசின் நிதி ஆயோக் அமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது. ஆனால் மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்கள் பிடிபட்டால், அபராதத்தை செலுத்திவிட்டு வாகனங்களை மீட்டுச் சென்று விடுகிறார்கள்.

எனவே இனி மணல் திருட்டில் ஈடுபடும் வாகனங்கள் பிடிபட்டால், சம்பந்தப்பட்டவர்களிடம் வாகனங்களை திருப்பி ஒப்படைக்கக்கூடாது. மாட்டு வண்டியாக இருந்தால், மாடுகளை மட்டும் உரிமையாளர்களிடம் ஒப்படைத்துவிட்டு, வண்டியை பறிமுதல் செய்ய வேண்டும்.

மணல் திருட்டில் ஈடுபட்ட வாகனங்களை ஒப்படைக்கக்கோரி கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தால், வண்டிகளை விடுவிப்பதில் கோர்ட்டு ஆர்வம் காட்டக்கூடாது. இந்த வழக்கில் தமிழக உள்துறை செயலாளரை எதிர்மனுதாரராக சேர்க்கிறோம்.

இந்த உத்தரவை உள்துறை செயலாளர் அனைத்து மாவட்ட கலெக்டர்களுக்கும் அனுப்பி, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அடுத்த மாதம் 11–ந்தேதி அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டு, விசாரணையை அடுத்த மாதம் 11–ந்தேதிக்கு ஒத்திவைத்தனர்.


Next Story