‘ஆறுகளை இணைக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன’ ஐகோர்ட்டில், தலைமை பொறியாளர் பதில் மனு


‘ஆறுகளை இணைக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன’ ஐகோர்ட்டில், தலைமை பொறியாளர் பதில் மனு
x
தினத்தந்தி 25 Sept 2018 3:30 AM IST (Updated: 25 Sept 2018 1:22 AM IST)
t-max-icont-min-icon

தமிழக ஆறுகளை இணைக்கும் திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன என்று மதுரை ஐகோர்ட்டில் தமிழக அரசின் தலைமை பொறியாளர் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

மதுரை,

தேசிய–தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தலைவர் பி.அய்யாக்கண்ணு, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:–

நாடு முழுவதும் செழிக்க அனைத்து நதிகளையும் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த மார்ச் மாதம் தமிழகம் முழுவதும் பயணம் செய்தோம். அப்போது ஏராளமான விவசாயிகள் தங்களது கோரிக்கைகளை மனுக்களாக எங்களிடம் அளித்தனர்.

அவற்றில், நீலகிரி மாவட்டம் கூடலூர் தாலுகாவில் ஓடும் ஓவேலி ஆற்றில் பருவமழை காலங்களில் 166 முதல் 180 டி.எம்.சி. தண்ணீர் செல்லும். இந்த தண்ணீர் முழுவதும் தமிழகத்தில் 15 கிலோ மீட்டர் தூரம் ஓடி கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டம் சாலியாற்றில் இணைந்து அரபிக்கடலில் வீணாக கலக்கிறது. தடுப்பணை கட்டி இந்த தண்ணீரை பவானி சாகர் அணைக்கு கொண்டு சென்றால் ஈரோடு உள்ளிட்ட 12 மாவட்டங்களுக்கு பயன்படுத்தலாம்.

இதேபோல நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையில் உற்பத்தியாகும் செண்பகவல்லி நதி, வலைமலையாறு, கோட்டைமலையாறு உள்ளிட்ட தமிழக பகுதிகளில் உருவாகும் ஆறுகளில் இருந்து வீணாக கடலில் கலக்கும் தண்ணீரை சேமிக்க உரிய இடங்களில் அணைகள், தடுப்பணைகள் கட்டுவதற்கு தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ், என்.சதீஷ்குமார் ஆகியோர் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக தலைமை பொறியாளர் செல்வராஜு தாக்கல் செய்த பதில் மனுவில் கூறியிருந்ததாவது:–

நீலகிரி மாவட்டத்தில் பருவ காலங்களில் ஆண்டுதோறும் 166 முதல் 180 டி.எம்.சி. தண்ணீர் வீணாக அரபிக்கடலில் கலக்கிறது என்று இந்த வழக்கில் மனுதாரர் கூறியதை நிரூபிக்க வேண்டும். அளவுக்கு அதிகமான மழை பொழிவு இருக்குமானால் 10 ஆண்டுகளுக்கு முன்பே பவானிசாகர் அணை கட்டும் சமயத்திலேயே ஆய்வு செய்திருப்பார்கள். நீலகிரி மாவட்டத்தில் உருவாகி அரபிக்கடலில் கலக்கும் ஓவேலி ஆற்றின் குறுக்கே அணை கட்டுவதில் தமிழகத்துக்கும், கேரளாவுக்கும் எல்லை பிரச்சினை ஏற்படும்.

அதேபோல நெல்லை மாவட்டத்தில் ஓடும் கருப்பா நதி ஆறு, செண்பகவல்லி ஆறு உள்ளிட்டவைகளை இணைத்து அணை கட்டுவது தொடர்பான திட்ட முன்வரைவு அரசிடம் அளிக்கப்பட்டு உள்ளது. மேலும் தமிழகத்தில் உள்ள நதிகள், ஆறுகளை இணைப்பது குறித்து ஆய்வு செய்து பல்வேறு திட்டங்கள் வகுக்கப்பட்டு உள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

விசாரணை முடிவில், இந்த வழக்கின் இறுதி உத்தரவு வருகிற 8–ந்தேதி பிறப்பிக்கப்படும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.


Next Story