குமரி வனப்பகுதியை புலிகள் காப்பகத்துடன் இணைக்க எதிர்ப்பு: விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


குமரி வனப்பகுதியை புலிகள் காப்பகத்துடன் இணைக்க எதிர்ப்பு: விவசாய தொழிலாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 25 Sept 2018 4:30 AM IST (Updated: 25 Sept 2018 1:36 AM IST)
t-max-icont-min-icon

குமரி வனப்பகுதியை புலிகள் காப்பகத்துடன் இணைக்க எதிர்ப்பு தெரிவித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் நடத்திய ஆர்ப்பாட்டத்தில் 3 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்றனர்.

நாகர்கோவில்,

குமரி மாவட்ட விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நாகர்கோவிலில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்துடன் குமரி மாவட்ட வனப்பகுதியை இணைக்கும் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையின் அரசாணைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அரசாணையை ரத்து செய்ய கோரியும் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.

மேலும், சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுபடி 2006 வன உரிமைச்சட்டம் அமைக்க வேண்டும், குமரி மாவட்டத்தில் தனியார் காடுகளாக மாற்றப்பட்ட பட்டா விளை நிலங்களை நிபந்தனை இன்றி விடுவிப்பு செய்ய வேண்டும், கரடி, பன்றி, குரங்கு உள்ளிட்ட வன விலங்குகள் ஊருக்குள் வராமல் கட்டுப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளும் ஆர்ப்பாட்டத்தின்போது வலியுறுத்தப்பட்டன.

ஆர்ப்பாட்டத்துக்கு செயலாளர் ரவி தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தை பழங்குடியினர் ஆன்றோர் மன்ற உறுப்பினர் ராஜன் தொடங்கி வைத்தார்.

தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் சுரேஷ்ராஜன், ஆஸ்டின் மற்றும் மனோதங்கராஜ் மற்றும் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். தி.மு.க. மாவட்ட பொருளாளர் கேட்சன், நீர்பாசன துறை தலைவர் வின்ஸ் ஆன்றோ உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Next Story