துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மீனவர் நலத்துறை அலுவலகம் முற்றுகை


துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மீனவர் நலத்துறை அலுவலகம் முற்றுகை
x
தினத்தந்தி 25 Sept 2018 4:00 AM IST (Updated: 25 Sept 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி மீனவர் நலத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

புதுச்சேரி,

புதுவை தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுக முகத்துவாரம் பகுதியில் மணல் திட்டுகள் உருவாகி உள்ளன. இதனால் துறைமுகத்தில் இருந்து கடலுக்குள் சென்று வரும் படகுகள் மணல் திட்டுகளில் மோதி சேதம் அடைகின்றன. எனவே மீனவர்கள் துறைமுக முகத்துவாரத்தை தூர்வார வேண்டும், கடலின் இருபுறமும் 500 மீட்டர் தூரத்திற்கு கற்களை கொட்டி ஆழப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி புதுச்சேரி எந்திர விசைப்படகு உரிமையாளர்கள் சங்கத்தினர் கடந்த 10–ந் தேதி முதல் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லாமல் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் நேற்று காலை 18 மீனவ கிராம விசைப்படகு, பைபர் மற்றும் கட்டுமர படகு உரிமையாளர்கள் தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி தேங்காய்திட்டு துறைமுக வாசலில் ஒன்று கூடினர். அங்கு அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அப்போது திடீரென மீனவர் நலத்துறை அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். ஆனால் அங்கிருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தி அனுமதிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே போராட்டம் நடத்த வேண்டும் என்று கூறினர். இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கும் லேசான தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதனைதொடர்ந்து போலீசாரின் எதிர்ப்பை மீறி உள்ளே சென்று மீனவர் நலத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். போராட்டத்திற்கு சங்க தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். சங்க நிர்வாகிகள் கவி, செல்வம் உள்பட பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தங்கள் கோரிக்கைளை வலியுறுத்தி கோ‌ஷங்கள் எழுப்பினர்.

இந்த போராட்டத்தின் காரணமாக மீனவர் நலத்துறை அலுவலகத்தில் பணியாற்றும் ஊழியர்கள் யாரும் அலுவலகத்தின் உள்ளே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இந்த போராட்டம் சுமார் 12 மணி வரை நீடித்தது. பின்னர் அவர்கள் போராட்டத்தினை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


Next Story