கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி விவசாயிகள் போராட்டம்


கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி விவசாயிகள் போராட்டம்
x
தினத்தந்தி 25 Sept 2018 4:00 AM IST (Updated: 25 Sept 2018 3:23 AM IST)
t-max-icont-min-icon

கடைமடைபகுதிக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரி வீடுகளில் கருப்பு கொடி கட்டி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.

நாகப்பட்டினம்,

மேட்டூர் அணையில் தண்ணீர் திறக்கப்படாததாலும், போதிய அளவு மழை பெய்யாததாலும் கடைமடை மாவட்டமான நாகையில் சம்பா சாகுபடி பணிகள் கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறவில்லை. நடப்பாண்டில் மேட்டூர் அணையில் திறந்துவிடப்பட்ட தண்ணீரை கொண்டு சம்பா சாகுபடி பணிகளை விவசாயிகள் தொடங்கினர். இந்தநிலையில் முக்கொம்பு அணையில் உடைப்பு ஏற்பட்டும், அதனை விரைந்து சரிசெய்யப்படாத காரணத்தால், வெண்ணாறு வடிநில கோட்டத்தில் இருந்து நாகைக்கு வரக்கூடிய காவிரி நீர் முற்றிலும் நின்று போனது. மேலும் நாகை பகுதிகளில் உள்ள ஆறுகள், வாய்க்கால்கள் முறையாக தூர்வாரப்படாததால், மேட்டூர் அணையில் இருந்து திறந்துவிடப்பட்ட தண்ணீரானது விவசாய நிலங்களுக்கு குறிப்பிட்ட காலத்துக்குள் வந்து சேரவில்லை.

இதனால் நாகை, செல்லூர், பாலையூர், சிக்கல், கீழ்வேளூர், பட்டமங்களம், ராதாமங்களம், வேதாரண்யம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேரடி நெல் விதைப்பு செய்து இருந்த சம்பா பயிர்கள் தண்ணீர் இன்றி கருகும் நிலை ஏற்பட்டது. இதையடுத்து கருகும் சம்பா பயிர்களை காப்பாற்ற கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்துவிடக்கோரியும், கடைமடை பகுதிகளுக்கு முறையாக காவிரி நீர் கொண்டுவராத பொதுப்பணித்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தை கண்டித்தும் பாலையூர் விவசாயிகள் நேற்று 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டத்தில் ஈடுபட்டனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடைமடை பகுதிக்கு தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story