மினி உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ஊட்டி அரசு கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு இந்திய அணியில் இடம்


மினி உலகக்கோப்பை கால்பந்து போட்டி: ஊட்டி அரசு கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு இந்திய அணியில் இடம்
x
தினத்தந்தி 26 Sept 2018 4:00 AM IST (Updated: 26 Sept 2018 12:49 AM IST)
t-max-icont-min-icon

மினி உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான இந்திய அணியில், ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 3 பேர் இடம் பிடித்து உள்ளனர்.

ஊட்டி,

உலக மினி கால்பந்து கூட்டமைப்பு மற்றும் செக் குடியரசு மினி கால்பந்து சங்கம் சார்பில் 21 வயதுக்கு உட்பட்டோருக்கான மினி உலகக்கோப்பை கால்பந்து போட்டி அடுத்த மாதம்(அக்டோபர்) 4–ந் தேதி முதல் 7–ந் தேதி வரை 3 நாட்கள் செக் குடியரசில் நடைபெறுகிறது. உலகக்கோப்பை போட்டி லீக் மற்றும் நாக் அவுட் முறையில் நடத்தப்படுகிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, துனிசியா உள்பட பல்வேறு நாடுகளை சேர்ந்த அணிகள் கலந்துகொண்டு விளையாட உள்ளன.

இந்திய மினி கால்பந்து சார்பில் மினி உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான இந்திய அணி வீரர்களை தேர்வு செய்யும் முகாம் கடந்த ஆகஸ்டு மாதம் டெல்லியில் 3 நாட்கள் நடந்தது. தமிழகத்தில் இருந்து 12 பேர் முகாமில் கலந்துகொண்டனர். அதில் நீலகிரி மாவட்டம் ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் படித்து வரும் 3 மாணவர்களும் பங்கேற்றனர்.

அங்கு கால்பந்து போட்டி மற்றும் உடற்தகுதி அடிப்படையில் வீரர்கள் தேர்வு செய்யப்பட்டனர். முடிவில் இந்திய அணியில் ஊட்டி அரசு கலைக்கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு இடம் கிடைத்து உள்ளது. பி.ஏ. பொருளாதாரம் படித்தும் வரும் ஊட்டி மஞ்சனக்கொரையை சேர்ந்த ராகுல், பி.ஏ. வரலாறு படிக்கும் ஊட்டி ரோஜா பூங்கா பகுதியை சேர்ந்த ஐவீன், பி.ஏ. பாதுகாப்பு படித்து வரும் ஊட்டி காந்தலை சேர்ந்த அஜித்குமார் ஆகிய 3 பேர் முதன்முறையாக இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டு உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாணவர்களின் குடும்பம் ஏழ்மையான குடும்பம் ஆகும். மாணவர் அஜித்குமாரின் தந்தை இறந்துவிட்டார். அவரது தாய் ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் சுகாதார தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

மினி உலகக்கோப்பை கால்பந்து போட்டிக்கான இந்திய அணியில் இடம் பிடித்த 3 மாணவர்களும் முதல் தலைமுறை பட்டதாரிகள் ஆவர். ஊட்டி அரசு கலைக்கல்லூரியில் இருந்து இந்திய அணிக்கு தேர்வான மாணவர்களை கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி பாராட்டினார். மேலும் பேராசிரியர்கள் மற்றும் சக மாணவ–மாணவிகள் வாழ்த்து தெரிவித்து உள்ளனர். மாணவர்கள் 3 பேரும் நேற்று ஊட்டி அரசு கலைக்கல்லூரி விளையாட்டு மைதானத்தில் கால்பந்து பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டனர். மேலும் அவர்கள் மும்பைக்கு சென்று பயிற்சியில் ஈடுபட உள்ளனர். இந்த தகவலை கல்லூரி முதல்வர் ஈஸ்வரமூர்த்தி தெரிவித்தார்.

இதுகுறித்து இந்திய அணியில் இடம் பிடித்த மாணவர்கள் கூறும்போது, இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இதற்கு முன்பாக நீலகிரி மாவட்ட அணி சார்பில் மாநில அளவிலான போட்டியில் மட்டுமே விளையாடி இருக்கிறோம். முதல் முறையாக உலகக்கோப்பை போட்டியில் ஆட உள்ளோம். போட்டியில் வெற்றி பெற்று இந்திய அணிக்கு பெருமை சேர்ப்பதே லட்சியமாக உள்ளது என்றனர்.


Next Story