இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு: ஓமன் நாட்டில் உள்ள கோவை வாலிபரை பிடிக்க என்.ஐ.ஏ. நடவடிக்கை


இந்து முன்னணி பிரமுகர் கொலை வழக்கு: ஓமன் நாட்டில் உள்ள கோவை வாலிபரை பிடிக்க என்.ஐ.ஏ. நடவடிக்கை
x
தினத்தந்தி 26 Sept 2018 4:45 AM IST (Updated: 26 Sept 2018 1:27 AM IST)
t-max-icont-min-icon

இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலை வழக்கு தொடர்பாக ஓமன் நாட்டில் தங்கியுள்ள கோவை வாலிபரை பிடிக்க, சர்வதேச போலீஸ் உதவியை என்.ஐ.ஏ. அமைப்பு நாடியுள்ளது.

கோவை,

கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கடந்த 2016–ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22–ந்தேதி படுகொலை செய்யப்பட்டார். இந்த கொலை வழக்கு தொடர்பாக சுபைர், முபாரக், சதாம் உசேன், செய்யது அபுதாகீர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.சி.ஐ.டி.க்கு மாற்றப்பட்டது. அதன் பின்னர் தேசிய புலனாய்வு முகமை அமைப்புக்கு (என்.ஐ.ஏ.) மாற்றப்பட்டது. தற்போது என்.ஐ.ஏ. அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் சசிகுமார் கொலை வழக்கில் கைதான சுபேர் என்பவரை தவிர மற்றவர்கள் ஜாமீனில் வெளியே வந்து விட்டனர். சசிகுமார் கொலையில் கோவை சாய்பாபா காலனி கே.கே.புதூரை சேர்ந்த முகமது ரபீக்குல் ஹசன் (35) என்பவருக்கும் தொடர்பு இருப்பதாக என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு சந்தேகம் எழுந்தது.

இதனை தொடர்ந்து முகமது ரபீக்குல் ஹசனுக்கு சொந்தமான வீடு மற்றும் அவரது மர அறுவை ஆலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு என்.ஐ.ஏ. அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். ஆனால் சசிகுமார் கொலை நடைபெற்ற ஒரு வாரத்தில் முகமது ரபீக்குல் ஹசன் ஓமன் நாட்டுக்கு சென்று விட்டார். அங்கு அவர் தொழில் நடத்தி வருகிறார்.

கோவையில் உள்ள தனது வீட்டில் நடைபெற்ற சோதனை தொடர்பாக முகமது ரபீக்குல் ஹசன் ஒரு வீடியோ வெளியிட்டார். அதில் சசிகுமார் கொலைக்கும் தனக்கும் தொடர்பு இல்லை. அதிகாரிகள் தனது வீட்டில் தேவையில்லாமல் சோதனை நடத்தி உள்ளனர் என்றார்.

இந்த நிலையில் முகமது ரபீக்குல் ஹசன் எப்போது இந்தியா வந்தாலும் அவரை கைது செய்ய என்.ஐ.ஏ. அதிகாரிகள் திட்டமிட்டு உள்ளனர். இதற்காக இந்தியாவில் உள்ள அனைத்து விமான நிலையங்களுக்கும் முகமது ரபீக்குல் ஹசனின் புகைப்படம், பாஸ்போர்ட் எண் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அனைத்து விமான நிலையங்களுக்கும் ‘ரெட்கார்னர்’ (போலீஸ் தேடும் நபர் குறித்த எச்சரிக்கை) நோட்டீசும் வழங்கப்பட்டு உள்ளது.

முகமது ரபீக்குல் ஹசன் ஓமன் நாட்டில் இருப்பதால் அவர் அங்கிருந்து மற்ற நாடுகளுக்கு தப்பி சென்று விடக்கூடாது என்பதற்காக சர்வதேச போலீஸ் (இன்டர்போல்) உதவியையும் என்.ஐ.ஏ. அதிகாரிகள் நாடி உள்ளனர்.


Next Story