4-ம் வகுப்பு மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு; முதியவர் தற்கொலை


4-ம் வகுப்பு மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றச்சாட்டு; முதியவர் தற்கொலை
x
தினத்தந்தி 26 Sept 2018 4:45 AM IST (Updated: 26 Sept 2018 2:03 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே 4-ம் வகுப்பு மாணவியை பாலியல் தொந்தரவு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டதையடுத்து முதியவர் தற்கொலை செய்துகொண்டார்.

திருவள்ளூர்,

திருவள்ளூரை அடுத்த தலகாஞ்சேரியை சேர்ந்தவர் முனுசாமி (வயது 62). இவர் திருவள்ளூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து வந்தார். அவர் பள்ளி பஸ்சில் மாணவ-மாணவிகளை அழைத்து வருவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 20-ந் தேதியன்று முனுசாமி பஸ்சில் இருந்து 4-ம் வகுப்பு மாணவியை இறக்கிவிட்டார்.

அதை பார்த்த அந்த சிறுமியின் தந்தை அந்த சிறுமியை முனுசாமி பாலியல் தொந்தரவு செய்ததாக கூறி அவரிடம் தகராறு செய்தார்.

இதுகுறித்து பள்ளி நிர்வாகத்திடம் அந்த மாணவியின் தந்தை புகார் அளித்து முனுசாமியையும் மாணவியின் தந்தை தாக்கியதாக கூறப்படுகிறது. மேலும் முனுசாமியை பள்ளி நிர்வாகம் வேலையில் இருந்து நிறுத்தி வைத்ததாக கூறப்படுகிறது. இதனால் மனவேதனையடைந்த முனுசாமி நேற்று தன்னுடைய வீட்டின் முன்பு இருந்த வேப்பமரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார்.

இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அவரது உறவினர்கள், பொதுமக்கள் கதறி அழுதனர். இறந்த முனுசாமியின் உடலை தூக்கி வந்து அந்த தனியார் பள்ளியின் முன்பு கிடத்தி முனுசாமி சாவுக்கு நியாயம் வேண்டும் என கூறி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டு மறியலிலும் ஈடுபட்டனர்.

இது குறித்து தகவல் அறிந்ததும் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ராக்கிகுமாரி, பாரதி, ராஜேந்திரன், மணி மற்றும் திருவள்ளூர் தாசில்தார் தமிழ்ச்செல்வன், மண்டல துணை தாசில்தார் வெங்கடேஷ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.

இதை ஏற்றுக்கொண்ட அவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு விட்டு கலைந்து சென்றனர். இது குறித்து புல்லரம்பாக்கம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மறியல் காரணமாக அந்த வழித்தடத்தில் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story