மரவள்ளிகிழங்கு விலை சரிவு: விவசாயிகள் கவலை


மரவள்ளிகிழங்கு விலை சரிவு: விவசாயிகள் கவலை
x
தினத்தந்தி 26 Sept 2018 3:15 AM IST (Updated: 26 Sept 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

பரமத்தி வேலூர் பகுதியில் மரவள்ளிகிழங்கின் விலை சரிவடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

பரமத்திவேலூர்,

பரமத்தி வேலூர் தாலுகா எஸ்.வாழவந்தி, பெரியகரசபாளையம், செங்கப்பள்ளி, பரமத்தி, பொத்தனூர், கூடச்சேரி, கபிலர்மலை, சின்னமருதூர், சோழசிராமணி, பெருங்குறிச்சி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மரவள்ளிகிழங்கு பயிரிடப்பட்டுள்ளது.

இப்பகுதிகளில் விளையும் மரவள்ளி கிழங்குகளை வியாபாரிகள் வாங்கிச்சென்று புதன்சந்தை, புதுச்சத்திரம், மின்னாம்பள்ளி, மலவேப்பங்கொட்டை, ஆத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிழங்கு ஆலைகளுக்கு அனுப்பி வருகின்றனர். கிழங்கு ஆலையில் மரவள்ளி கிழங்கில் இருந்து ஜவ்வரிசி, கிழங்கு மாவு தயார் செய்யப்படுகிறது. மேலும் சிப்ஸ் தயார் செய்யவும் வியாபாரிகள் அதிக அளவில் வாங்கிச் செல்கின்றனர்.

மரவள்ளி கிழங்குகளை வாங்கும் ஆலை உரிமையாளர்கள் கிழங்கில் உள்ள மாவுச்சத்து மற்றும் புள்ளிகள் அடிப்படையில் விலை நிர்ணயம் செய்கின்றனர். கடந்த வாரம் மரவள்ளிகிழங்கு ஒரு டன் ரூ.6 ஆயிரத்து 500-க்கு விற்பனையானது. தற்போது ஒரு டன் ரூ.5,750 வரை விற்பனையாகிறது. சிப்ஸ் தயார் செய்ய வாங்கிச்செல்லப்படும் மரவள்ளிகிழங்கு டன் ஒன்று கடந்த வாரம் ரூ.8 ஆயிரத்திற்கும், தற்போது ரூ.7 ஆயிரத்திற்கும் விற்பனையாகிறது.

மரவள்ளி கிழங்கின் வரத்து அதிகரித்துள்ளதால் விலை சரிவடைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர். விலை வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். 

Next Story