அந்தியூர் பெரிய ஏரியில் இருந்து மணல் கடத்திய டிராக்டர் பறிமுதல்; 2 பேர் மீது வழக்கு
அந்தியூர் பெரிய ஏரியில் இருந்து மணல் கடத்திய டிராக்டரை பறிமுதல் செய்து, 2 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
அந்தியூர்,
அந்தியூர் பெரிய ஏரியில் இருந்து மணல் கடத்தப்படுவதாக அந்தியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து நேற்று காலை அவர் போலீசாருடன் பெரிய ஏரி பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது அந்தியூர்–கொல்லபாளையம் ரோட்டில் மணல் ஏற்றிக்கொண்டு ஒரு டிராக்டர் வந்தது. உடனே போலீசார் அந்த டிராக்டரை மறித்து அதை ஓட்டிவந்த டிரைவரிடம் விசாரணை நடத்தினார்கள். விசாரணையில் அவர், கோவிலூரை சேர்ந்த மணிகண்டன் (30) என்பதும், டிராக்டர் அந்தியூர் தவுட்டுப்பாளையத்தை சேர்ந்த மாசிலாமணி என்பவருக்கு சொந்தமானது என்றும் தெரியவந்தது.
மேலும், மாசிலாமணி தன்னுடைய டிராக்டரில் பெரிய ஏரியில் இருந்து மணல் அள்ளி கடத்தி வந்ததும் தெரிந்தது. இதைத்தொடர்ந்து போலீசார் டிராக்டரை மணலுடன் பறிமுதல் செய்தனர்.
இதுமட்டுமின்றி டிரைவர் மணிகண்டன், டிராக்டர் உரிமையாளர் மாசிலாமணி ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த மணல் கடத்தல் குறித்து அந்தியூர் தாசில்தார் தொடர்ந்து விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பார் என்று போலீசார் தெரிவித்தார்கள்.