காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வக பங்களிப்புடன் தீபாவளி பண்டிகைக்கு வருகிறது பசுமை பட்டாசு
காரைக்குடி மத்திய மின்வேதியியல் ஆய்வக பங்களிப்புடன் தீபாவளி பண்டிகை சந்தைக்கு பசுமை பட்டாசு வர உள்ளது.
காரைக்குடி,
காரைக்குடி மத்திய மின் வேதியியல் ஆய்வகத்தில் (சிக்ரி) 2 நாட்கள் பார்வையாளர் தின விழா நடைபெற்றது. இதையொட்டி முதல் காலை 9.30மணி முதல் மாலை 4.30மணி வரை பார்வையாளர்கள் பார்வையிட அனுமதிக்கப்பட்டனர். இந்த ஆய்வகத்தில் மின் வேதியியல் துறைக்கு பயன்படும் நவீன கனிம மற்றும் மூலப்பொருட்கள், மின் கரிம வேதியியல், மின் கனிம வேதியியல், நோய் சம்பந்தமான கிருமிகளை ஆராய பயன்படும் நவீன சென்சார்கள் மற்றும் மின் முலாம் பூசுதல் ஆகிய பல்வேறு துறைகளில் ஆராய்ச்சி மூலம் 250–க்கும் மேற்பட்ட தொழில் நுட்பங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. மேலும் நைட் ரேட்டை அடிப்படையாக கொண்டு சிவகாசியில் பட்டாசு தாயாரிக்கப்படுகிறது.
மேலும் நாட்டின் மொத்த தேவையில் 85 சதவீதம் பட்டாசுகள் சிவகாசியில் தயாரிக்கப்படுகிறது. அதிக ஒலி மற்றும் காற்று மாசு ஏற்படுவதால் புதுடெல்லியில் இந்த பட்டாசை விற்பதற்கு தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுஉள்ளதால் பசுமை பட்டாசு தயாரிக்க வேண்டிய கட்டாயத்தில் பட்டாசு உற்பத்தியாளர்கள் உள்ளனர்.
பொதுவாக சிவகாசியில் தயாரிக்கப்படும் பட்டாசுகள் அலுமினியத்தை மூலப்பொருட்களாக வைத்து சல்பர், கார்பன், பொட்டாசியம் நைட் ரேட் ஆகியவை சேர்த்து தயாரிக்கப்படுகிறது. தற்போது இங்கு கண்டுப்படிக்கப்பட்டுள்ள இந்த பட்டாசில் அலுமினியத்திற்கு பதிலாக மெக்னீசியம் சேர்க்கப்பட்டுஉள்ளது. சல்பர் மற்றும் கார்பன் தேவையில்லை. இந்த பட்டாசின் ஒலி அளவு 120–ல் இருந்து 111 டெசிபலாக குறையும். மேலும் காற்று மாசு 70சதவீதமாக குறையும். வரும் தீபாவளி பண்டிகையின் போது இங்கு தயாரிக்கப்படும் இந்த பசுமை பட்டாசுகள் சந்தைக்கு வர வாய்ப்பு உள்ளது.
இதில் சிக்ரியுடன் நாக்பூரில் உள்ள நீரி ஆராய்ச்சி நிலையம், சிவகாசி டான் பாமா ஆகியவை இணைந்து செயல்படுகிறது. சிக்ரியில் 2 நாட்கள் நடைபெற்ற பார்வையாளர் தின விழாவில் நடைபெற்ற ஆராய்ச்சிகளை தமிழகம் முழுவதும் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் இருந்து 22 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ–மாணவிகள், பொதுமக்கள் பார்வையிட்டு அதற்கான விளக்கங்களை கேட்டு தெரிந்துகொண்டனர்.
மேலும் ஆய்வகத்தில் தொழில் நுட்ப ஆராய்ச்சிகளின் புதிய கண்டுப்பிடிப்புகள் மற்றும் அவற்றின் மாதிரிகளின் செயல் விளக்க வண்ணப்படங்கள் ஆகியவைகள் பார்வையாளர்களின் கண்காட்சிக்கு வைக்கப்பட்டு இருந்தது. அவற்றை மாணவ–மாணவிகள் பொதுமக்கள் பார்வையிட்டனர். இதற்கான ஏற்பாடுகளை மத்திய மின்வேதியியல் ஆய்வக இயக்குனர் டாக்டர் விஜயமோகனன் பிள்ளை தலைமையில் விஞ்ஞானிகள் செய்திருந்தனர்.