துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி தலைமை தபால் நிலையம் முன்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டம்
துறைமுக முகத்துவாரத்தை தூர்வாரக்கோரி தலைமை தபால் நிலையம் முன்பு மீனவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
புதுச்சேரி,
புதுச்சேரி தேங்காய்திட்டில் மீன்பிடி துறைமுகம் உள்ளது. இதன் முகத்துவார பகுதியில் மணல் திட்டு உருவாகியுள்ளது. இதனால் துறைமுகத்தில் இருந்து கடலுக்கு சென்று வரும் போது மணல் திட்டில் மோதி படகுகள் சேதம் அடைகின்றன. இதை சீரமைக்க கோரி மீனவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனால் படகுகள் தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் துறைமுக முகத்துவாரத்தை உடனடியாக தூர்வாரி இருபுறமும் 500 மீட்டர் நீளத்திற்கு கற்களை கொட்ட வேண்டும், முகத்துவாரத்தை 10 மீட்டர் ஆழப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தி வந்தனர்.
இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தலைமை தபால் நிலையம் அருகே நேற்று தரையில் அமர்ந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்திற்கு விசைப்படகு உரிமையாளர் சங்க தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் படகு உரிமையாளர்கள், தொழிலாளர்கள், மீன் விற்பனை செய்யும் பெண்கள், மீன்களை ஏற்றி இறக்கும் வாகன உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.