கேரள வாலிபர் பிணம் குமரியில் வீச்சு: கொலையாளிகளை அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை


கேரள வாலிபர் பிணம் குமரியில் வீச்சு: கொலையாளிகளை அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை
x
தினத்தந்தி 27 Sept 2018 3:45 AM IST (Updated: 27 Sept 2018 2:57 AM IST)
t-max-icont-min-icon

கேரள வாலிபர் பிணம் குமரியில் வீசப்பட்டது தொடர்பாக கொலையாளிகளை குமரிக்கு அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

அஞ்சுகிராமம்,

குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் பொற்றையடி அருகே குளக்கரையில் கடந்த ஏப்ரல் மாதம் 1-ந் தேதி வாலிபர் ஒருவர் தீ வைத்து எரித்து கொலை செய்யப்பட்டு கிடந்தார். அவரது உடல் பாதி எரிந்த நிலையில் இருந்தது.

தகவல் அறிந்த கன்னியாகுமரி மற்றும் அஞ்சுகிராமம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். கொலை செய்யப்பட்டு கிடந்தவரின் கையில் ஆர்யா என்று பச்சை குத்தப்பட்டு இருந்தது. அதை வைத்து போலீசார் இறந்தவர் யார்? என்பதை கண்டறிய பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வந்தனர்.

ஆர்யா என்ற பெயர் கேரளாவில் அதிகம் பயன்படுத்தப்படும் என்பதால், கொலையானவர் கேரளாவை சேர்ந்தவராக இருக்கலாம் என்று கேரள போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கேரள போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை நடத்தி வந்தனர். அப்போது, அஞ்சுகிராமம் அருகே எரித்துக் கொலை செய்யப்பட்டது திருவனந்தபுரத்தைச் சேர்ந்த ஆகாஷ் (வயது 22) என்பதும், அவர் முன்விரோதத்தில் கொலை செய்யப்பட்டதும் தெரிய வந்தது.

இந்த கொலை தொடர்பாக கேரள மாநிலம் வலியத்துறையை சேர்ந்த அனுஅஜூ (27), அவருடைய தாயார் அல்போன்சா, மனைவி ரேஷ்மா, கூட்டாளி ஜிதின் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் கேரள போலீசார் அனுஅஜூ, ரேஷ்மா, ஜிதின் ஆகிய 3 பேரிடம் விசாரணை நடத்த 5 நாட்கள் போலீஸ் காவல் எடுத்தனர். உதவி போலீஸ் சூப்பிரண்டு ஷான்ஹான், சப்-இன்ஸ்பெக்டர் ஜிஜிகுமார் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசார் 3 பேரையும் குமரி மாவட்டம் அஞ்சுகிராமம் அருகே பொற்றையடியில் உள்ள கண்டுகிரிஷி குளக்கரை பகுதிக்கு அழைத்து வந்தனர். அப்போது அனுஅஜூ, ஜிதின் ஆகிய 2 பேரும் ஆகாசின் உடலை எரித்த இடத்தை அடையாளம் காட்டியதோடு, எப்படி எரித்தனர் என்பதை நடித்தும் காட்டினார்கள்.

இந்த வழக்கு குறித்து கேரள தனிப்படை போலீசார் கூறுகையில், அனுஅஜூ திருடிய 3 மோட்டார்சைக்கிளை ஆகாசிடம் விற்பனை செய்ய கொடுத்துள்ளார். விற்பனை செய்த பணத்தை ஆகாஷ், அனுஅஜூவிடம் கொடுக்கவில்லை. இதில் அவர்களுக்குள் முன்விரோதம் இருந்துள்ளது. சம்பவத்தன்று இதுதொடர்பான வாக்குவாதத்தில்தான் ஆகாசை கொலை செய்துள்ளனர். ஆர்யா என்பது ஆகாசின் காதலி பெயர். அந்த பெண்ணை கடத்தியதாக ஏற்கனவே ஆகாஷ் கைது செய்யப்பட்டுள்ளார். அதை வைத்துதான் கொலையாளிகளை எளிதாக கைது செய்ய முடிந்தது என்றனர். 

Next Story