கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வரும் மணல் குவாரியை உடனடியாக தடை செய்ய வேண்டும்


கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வரும் மணல் குவாரியை உடனடியாக தடை செய்ய வேண்டும்
x
தினத்தந்தி 28 Sept 2018 4:30 AM IST (Updated: 27 Sept 2018 11:03 PM IST)
t-max-icont-min-icon

கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வரும் மணல் குவாரியை உடனடியாக தடை செய்ய வேண்டும் என்று விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

தாமரைக்குளம்,

அரியலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் விஜயலட்சுமி தலைமை தாங்கினார். இக்கூட்டத்தில் பங்கேற்ற விவசாயிகள் பேசியதாது:–

காவேரி டெல்டா பாசன விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் தங்க தர்மராஜன் பேசுகையில், கொள்ளிடம் ஆற்றில் செயல்பட்டு வரும் மணல் குவாரியை உடனடியாக தடை செய்ய வேண்டும். கொள்ளிடத்தில் சென்ற அதிகப்படியான தண்ணீரால் பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கண்டறிந்து நிவாரணம் வழங்க வேண்டும். கொள்ளிடம் ஆற்றின் கரையோரங்களில் வசிக்கும் விவசாயிகள் டயர் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி வழங்க வேண்டும். இனி வரும் காலங்களில் கொள்ளிடத்தில் வரும் தண்ணீரை முறையாக பயன்படுத்த திட்டமிட வேண்டும் என்றார்.

மாவட்ட விவசாய சங்க தலைவர் ஜெயச்சந்திரன் பேசுகையில், ஆதனாக்குறிச்சியில் அரசு புறம்போக்கு நிலத்தை கிராம நிர்வாக அலுவலர் ஒருவர் ஆக்கிரமித்துள்ளார். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி பொதுமக்கள் பயன்பாட்டுக்கு விட வேண்டும். 12 ஏரிகளுக்கு தண்ணீர் செல்லும் செங்காய் ஓடையின் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்புகளை அகற்றி விவசாயிகளை காக்க வேண்டும் என்றார்.


தமிழக அம்பேத்கர் விவசாய இயக்க தலைவர் அம்பேத்கர் வழியன் பேசுகையில், அரியலூர் மாவட்டம் கொள்ளிட ஆற்றின் குறுக்கே தடுப்பணைகளை கட்ட வேண்டும். கொள்ளிட ஆற்றில் உயிரிழந்த பள்ளி மாணவனின் குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்க வேண்டும்.

குருவாடி, ஏலாக்குறிச்சி, திருமாழபாடி போன்ற பகுதியிலுள்ள கொள்ளிட ஆற்றில் மாட்டு வண்டியில் மணல் அள்ள அனுமதி அளிக்க வேண்டும். திருமானூரை புதிய வருவாய் வட்டமாக அறிவிக்க வேண்டும். திருமானூரில் தீயணைப்பு நிலையம் அமைக்க வேண்டும். திருமழபாடி, ஏலாக்குறிச்சி, திருமானூர், தா.பழூர் ஆகிய இடங்களில் தடுப்பணைகள் கட்ட வேண்டும். ஆசவீரன்குடிக்காடு கிராமத்தில் திருவள்ளுவர் சிலை வைக்க வேண்டும்.


அரியலூர் மாவட்ட விவசாயிகள் சங்க தலைவர் செங்கமுத்து பேசுகையில், அரசுக்கு சொந்தமான இடங்களிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். விவசாயிகளுக்கு சொந்தமான மின் மோட்டார் சர்வீஸ் முறையை எளியதாக்க வேண்டும். முன்முனை மின்சாரத்தை தடையில்லாமல் வழங்க வேண்டும். பயிர் காப்பீடு செய்துள்ள அனைத்து விவசாயிகளுக்கும் பயிர் காப்பீடு தொகையை உடனடியாக வழங்க வேண்டும். காலதாமதம் இல்லாமல் உடனடியாக பயிர் கடன் தொகையை கூட்டுறவு துறை வழங்க வேண்டும். சிமெண்டு ஆலைகளுக்கு செல்லும் லாரிகளுக்கு வேக கட்டுப்பாடு கருவிகளை பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


அகில இந்திய விவசாய சங்கங்களின் கூட்டமைப்பின் மாநில செயலாளர் ராஜேந்திரன் பேசுகையில், கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக பராமரிப்பு இல்லாமல் உள்ள செங்கரையூர் வாய்க்காலை தூர்வார வேண்டும். பொதுமக்களின் எதிர்ப்பை மீறி அமைக்கப்பட்ட மணல் குவாரியை மூட வேண்டும். தாழ்வாக உள்ள மின் கம்பிகளை உயர்த்தியும், உடைந்த மின்கம்பங்களை மாற்றியும் விபத்துக்கள் ஏற்படாத வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்றார்.

இதைதொடர்ந்து கலெக்டர் விவசாயிகளின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். மேலும் விவசாயிகளின் கோரிக்கை மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

கூட்டத்தில், தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் அன்புராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் லோகேஷ்வரி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story