கார் பட்டறை உரிமையாளர் வெட்டிக்கொலை மருமகன்களுக்கு வலைவீச்சு


கார் பட்டறை உரிமையாளர் வெட்டிக்கொலை மருமகன்களுக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 28 Sept 2018 4:45 AM IST (Updated: 28 Sept 2018 12:35 AM IST)
t-max-icont-min-icon

சேந்தமங்கலம் அருகே, கார் பட்டறை உரிமையாளரை அவரது 2 மருமகன்கள் வெட்டிக்கொலை செய்தனர். அவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

நாமக்கல்,

நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலம் அருகே உள்ள துத்திக்குளம் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாதேஸ்வரன் (வயது 49). இவரது மனைவி உமா மகேஸ்வரி (45). இவர்களுக்கு சொந்தமான கார் பட்டறை நாமக்கல் அருகே உள்ள முதலைப்பட்டி புதூரில் இயங்கி வருகிறது.

இந்த நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக மாதேஸ்வரன் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்தபோது, தனது தந்தை ரங்கராஜுக்கு பணம் அனுப்பி வந்தார். அந்த பணத்தில் ரங்கராஜ், தனது மகள் சாந்திக்கு (52), துறையூர் பகுதியில் விவசாய நிலம் வாங்கி வைத்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மாதேஸ்வரனுக்கு ஆரம்பத்தில் தெரியாமல் இருந்து வந்தது.

இதைத்தொடர்ந்து வெளிநாட்டில் இருந்து ஊர் திரும்பிய மாதேஸ்வரன் தனது அக்காள் சாந்தியின் மகன்கள் சதீஸ் (25), ராதாகிருஷ்ணன் (35) ஆகியோருடன் கூட்டு சேர்ந்து லாரி தொழில் நடத்தி வந்தார். சமீபத்தில் லாரிகள் விற்ற பணத்தை தனது மருமகன்களுக்கு கொடுக்காமல் அவர் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து மருமகன்களான சதீஸ், ராதாகிருஷ்ணன் ஆகியோர் மாதேஸ்வரனிடம் பணத்தை கேட்டு தொந்தரவு செய்து வந்துள்ளனர். அப்போது, தான் வெளிநாட்டில் இருந்தபோது அனுப்பிய பணத்தை தனது தந்தை ரங்கராஜ், அக்காள் சாந்திக்கு விவசாய நிலம் வாங்கி கொடுத்துள்ளார். எனவே தற்போது லாரி விற்ற பணத்தை தரமுடியாது எனக்கூறி அவர் மறுத்துள்ளார். இதனால் அவர்களுக்கு இடையே முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த மாதேஸ்வரன் நள்ளிரவில் கார் செட்டிற்கு வந்தபோது, அங்கு மறைந்து இருந்த அவரது மருமகன்கள் சதீஸ், ராதாகிருஷ்ணன் ஆகிய இருவரும் திடீரென கொடுவாளால் அவரை சரமாரியாக வெட்டினர். இதில் மாதேஸ்வரன் துடிதுடித்து அலறினார்.

இதைக்கேட்டு ஓடி வந்த அவரது மனைவி உமா மகேஸ்வரியை பார்த்ததும் அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். உடனடியாக மாதேஸ்வரன் நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து சேந்தமங்கலம் போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் பொன்.செல்வராஜ் மற்றும் போலீசார் சதீஸ் மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் வலைவீசி தேடி வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட மாதேஸ்வரனுக்கு சிவசக்திவேல் (17) என்ற மகனும், பிரியதர்ஷினி (14) என்ற மகளும் உள்ளனர்.

கார் பட்டறை உரிமையாளர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story