விடாமுயற்சியால் நினைத்த இலக்கை அடையலாம் மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை


விடாமுயற்சியால் நினைத்த இலக்கை அடையலாம் மாணவர்களுக்கு கலெக்டர் அறிவுரை
x
தினத்தந்தி 28 Sept 2018 4:30 AM IST (Updated: 28 Sept 2018 1:51 AM IST)
t-max-icont-min-icon

விடாமுயற்சி இருந்தால் மாணவர்கள் நினைத்த இலக்கை அடையலாம் என்று மாவட்ட கலெக்டர் அன்பழகன் அறிவுரை வழங்கினார்.

கரூர்,

கரூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் கரூர் கொங்கு கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணைய தேர்வர்கள் மற்றும் அரசுப்பணியில் சேர விரும்புபவர்களுக்கான ஊக்கப்படுத்தும் ‘விழித்தெழு, நீங்களும் அரசு அலுவலர் ஆகலாம்‘ என்ற ஆலோசனை வழங்கும் நிகழ்ச்சி கரூரில் நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் அன்பழகன் தலைமை தாங்கி பேசினார். அப்போது அவர் பேசியதாவது:-

அரசனாவது பிறப்பின் அடிப்படையை கொண்டு நடக்கிறது. ஆனால் ஆட்சியாளன் என்பது தாமே உருவாக்கிக்கொள்வது. ஜனநாயக ஆட்சியில் படித்த எல்லோரும் ஆட்சி செய்யலாம். வெற்றிபெற தகுதியான யாரையும் தடுத்து விட முடியாது. தேர்வு எழுதுபவர்களுக்கு எல்லாம் தெரிந்திருக்க வேண்டும். எல்லாவற்றையும் படிக்காமல் எதையெல்லாம் படிக்க வேண்டுமோ அதையெல்லாம் படிக்க வேண்டும். பழைய மாதிரி வினாத்தாள்களை பார்க்க வேண்டும். அதில் என்ன கேட்டிருக்கிறார்கள், எதிலிருந்து கேட்டிருக்கிறார்கள் என்பதை தெரிந்து கொள்ள வேண்டும்.

பாடத்திட்டத்தினை அறிந்து படிக்க வேண்டும். இன்றைய நாள் உங்களுக்கு மிகச்சிறந்த நாள். நல்ல துவக்கமே அடுத்த அத்தியாயத்தின் துவக்கமாகும். ஒரே பாடத்தையே தொடர்ந்து படிக்காமல் பல்வேறு பாடங்களுக்கு நேரம் ஒதுக்கி படிக்க வேண்டும். உலகத்தில் உயர்ந்தவர்கள் எல்லோரும் ஒருகாலத்தில் சாதாரணமானவர்களே. மீண்டும் வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்க கூடாது. கதவை தட்டும்போதே திறந்து விட வேண்டும்.

நீங்கள் என்னவாக வேண்டுமென்று எதிர்பார்க்கிறீர்களோ அதுவாகவே மாறுகிறீர்கள். நம்மால் வெற்றி பெற முடியுமா என்று எண்ணினால் அது நம் வேகத்தை குறைத்து விடும். விடா முயற்சியால் நினைத்த இலக்கை மாணவர்கள் அடையலாம். சிவில் சர்வீஸ் தேர்வுகளில் தமிழ்வழியில் கற்றவர்களே அதிக அளவு வெற்றி பெற்றுள்ளார்கள். தமிழக அரசு, சிவில் சர்வீஸ் தேர்வு எழுதுபவர்களுக்காக தனியாக கட்டணமில்லா பயிற்சி வகுப்பை நடத்தி வருகிறது.

படித்துக்கொண்டே போனால் பின்னால் மறந்து கொண்டே வரும். அதை மனதில் நிறுத்திக்கொள்ள காலையில் எழுந்தவுடன் கண்களை மூடி முதல்நாள் நடைபெற்ற அனைத்து செயல்களையும் வரிசைப்படுத்தி ஞாபகப்படுத்தி பார்க்க வேண்டும். இந்த சிறிய பயிற்சியை நாள்தோறும் மேற்கொண்டால் நம் நினைவாற்றல் மேம்படும். வெற்றி என்பது தகுதியை உருவாக்கிக்கொள்வதுதான்.

நீங்கள் உங்கள் நேரத்தை எவ்வாறு செலவு செய்கிறீர்கள் என்பதை பொறுத்தே வெற்றியின் சதவீதம் கூடும். நீங்கள் கடந்து வந்த பாதையை நினைத்து வருத்தப்படுவதால் எந்தவித பயனும் இல்லை. அதிலுள்ள பிழைகளை திருத்திக்கொண்டு நீங்கள் பயணம் செய்தால் அது உங்களை வெற்றிக்கு அழைத்துச்செல்லும். எனவே, வாய்ப்புகள் வரும்போதே அதை பயன்படுத்தி வாழ்க்கையில் நல்ல நிலையை அடைய வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் விஜயா, கொங்கு கல்வி அறக்கட்டளை தலைவர் நாச்சிமுத்து, மண்மங்கலம் வட்டாட்சியர் ரவிச்சந்திரன், கல்லூரி தாளாளர் சிவக்குமார், கல்லூரி முதல்வர் புஷ்பராணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story