குடும்ப தகராறில் இளம்பெண்ணை சுட்டுக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை
வேலூர் அருகே குடும்ப தகராறில் இளம்பெண்ணை சுட்டுக்கொன்ற தொழிலாளிக்கு ஆயுள்தண்டனை விதித்து வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.
வேலூர்,
அணைக்கட்டு அருகே உள்ள அல்லேரி மலைக் கிராமத்தைச் சேர்ந்தவர் அண்ணாமலை (வயது 36), தொழிலாளி. இவருடைய மனைவி கலா. கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மனவேதனை அடைந்த இளம்பெண் கலா, கணவரிடம் கோபித்துக் கொண்டு ஊசூர் அருகே உள்ள சிவனாதபுரம் கல்லாங்குளம் பகுதியில் உள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டுக்குச் சென்று விட்டார்.
அண்ணாமலை 2009-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 3-ந்தேதி இரவு கல்லாங்குளத்துக்குச் சென்று, அங்கிருந்த மனைவி கலாவை அல்லேரிக்கு வரும்படி அழைத்துள்ளார். அதற்கு கலா மறுத்துள்ளார். ஆனாலும் அண்ணாமலை தொடர்ந்து கலாவை தன்னுடன் குடும்பம் நடத்த வீட்டுக்கு வரும்படி வலியுறுத்தி வந்தார்.
இதனால் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது கலாவின் அக்காள் உமா (26) கலாவுக்கு ஆதரவாக பேசி உள்ளார். அண்ணாமலையை தகாத வார்த்தைகளால் திட்டி உள்ளார். ஆத்திரம் அடைந்த அண்ணாமலை தான் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியால் உமாவை சுட்டுக்கொன்றார்.
இதுகுறித்து விரிஞ்சிபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அண்ணாமலையை கைது செய்து, வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைத்தனர். உமாவை சுட்டுக் கொல்ல பயன்படுத்திய நாட்டுத் துப்பாக்கி பறிமுதல் செய்யப்பட்டது. அது, உரிமமில்லா கள்ளத்துப்பாக்கி எனத் தெரிய வந்தது.
இந்த வழக்கு விசாரணை வேலூர் விரைவு மகளிர் கோர்ட்டில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி செல்வம் விசாரித்து நேற்று தீர்ப்புக் கூறினார். குடும்ப தகராறில் உமாவை சுட்டுக்கொன்றதற்காக அண்ணாமலைக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததற்காக 3 ஆண்டுகள் சிறை தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், நாட்டுத் துப்பாக்கியை பயன்படுத்தியதற்காக 3 ஆண்டுகள் சிறைதண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி செல்வம் தீர்ப்புக் கூறினார்.
மேலும் தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும், அபராத தொகையைச் செலுத்த தவறினால் கூடுதலாக 3 மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். அரசு தரப்பில் வக்கீல் லட்சுமி பிரியா ஆஜராகி வாதாடினார். இதையடுத்து பலத்த காவலுடன் அண்ணாமலை அழைத்துச் செல்லப்பட்டு வேலூர் மத்திய ஆண்கள் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story