கோபி பகுதியில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை 150 ஏக்கர் பரப்பளவிலான வாழை– நெல் பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது


கோபி பகுதியில் விடிய விடிய கொட்டி தீர்த்த மழை 150 ஏக்கர் பரப்பளவிலான வாழை– நெல் பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது
x
தினத்தந்தி 29 Sept 2018 3:45 AM IST (Updated: 28 Sept 2018 7:01 PM IST)
t-max-icont-min-icon

கோபி பகுதியில் விடிய, விடிய மழை கொட்டி தீர்த்தது. இதன்காரணமாக கோபி பகுதியில் 150 ஏக்கர் பரப்பளவிலான வாழைகள்– நெல் பயிர்களை வெள்ளம் சூழ்ந்தது.

கடத்தூர்,

கோபி மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் உள்ள மொடச்சூர், கொளப்பலூர், கெட்டிச்செவியூர், பாரியூர் ஆகிய பகுதிகளில் கடந்த சில நாட்களாக காலை முதல் மாலை வரை வெயில் அடிப்பதும், இரவு நேரங்களில் மழை பெய்வதுமாக இருந்து வந்தது. நேற்று முன்தினம் இரவு 7 மணி அளவில் மழை பெய்ய தொடங்கியது. பின்னர் சிறிது நேரத்தில் அது பலத்த மழையாக மாறியது.

இந்த மழை நேற்று அதிகாலை 4 மணி வரை கொட்டி தீர்த்தது. விடிய விடிய பலத்த மழை பெய்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான இடங்களில் மழைநீர் தேங்கி நின்றது. கோபி பகுதியில் பெய்த கனமழை காரணமாக கீரிப்பள்ளம் ஓடையில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

இந்த தண்ணீர் தடப்பள்ளி வாய்க்காலை சென்றடையும். ஆனால் ஓடையில் அடைப்பு ஏற்பட்டதால் கோபியில் பதி என்ற இடத்தின் வழியாக ஓடையில் இருந்து தண்ணீர் வெளியேறி அருகில் 150 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் மற்றும் நெல் பயிர்களை சூழ்ந்தது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘கோபி அருகே உள்ள தடப்பள்ளி வாய்க்கால் மற்றும் கீரிப்பள்ளம் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் தான் தண்ணீர் வயல்களுக்குள் புகுந்துவிட்டது. இதனால் அங்கு பயிரிடப்பட்டு இருந்த நெல் பயிர்கள் மற்றும் வாழைகள் அனைத்தும் நாசம் அடைந்து விட்டது. எனவே பயிர்களை இழந்த எங்களுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும். மேலும் வாய்க்கால்களை தூர்வார வேண்டும்’ என்றனர்.

இதேபோல் அந்தியூர், வேம்பத்தி, ஆப்பக்கூடல், எண்ணமங்கலம் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 8.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது. அப்போது பலத்த சூறாவளிக்காற்று வீசியது. இதனால் வேம்பத்தி பகுதியில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டிருந்த வாழைகள் அனைத்தும் அடியோடு சாய்ந்தது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘வேம்பத்தி பகுதியில் சூறாவளிக்காற்றுடன் பெய்த மழையால் 1000–க்கும் மேற்பட்ட வாழைகள் அடியோடு சாய்ந்துவிட்டன. தற்போது அறுவடைக்கு தயாராக இருந்த நிலையில் வாழைகள் சாய்ந்ததால் பெரும் மனவேதனையில் உள்ளோம். அதனால் அதிகாரிகள் சூறாவளிக்காற்றினால் சாய்ந்த வாழைகளை பார்வையிட்டு நஷ்டஈடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.

அறச்சலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு 10.30 மணி அளவில் பலத்த மழை பெய்தது. இந்த மழை நேற்று அதிகாலை 2 மணி வரை நீடித்தது. இதனால் அறச்சலூர் பகுதியில் உள்ள ரோடுகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் தேங்கி நின்றது.

இதேபோல் சிவகிரி, புஞ்சைபுளியம்பட்டி, டி.என்.பாளையம் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.

ஈரோடு மாவட்டத்தில் நேற்று முன்தினம் பெய்த மழை அளவு மில்லி மீட்டரில் வருமாறு:–

அறச்சலூர்– 74, கோபி –71, கொடிவேரி –62, பெருந்துறை –60, கவுந்தப்பாடி –48, சத்தியமங்கலம் –42, பவானிசாகர் –35, சென்னிமலை –34, மொடக்குறிச்சி –15, பவானி –12.4, தாளவாடி –12, கொடுமுடி –12, வரட்டுப்பள்ளம் –7.4, நம்பியூர் –1.

அதிக பட்சமாக அறச்சலூரில் 74 மில்லி மீட்டர் மழை அளவும், குறைந்த பட்சமாக நம்பியூரில் 1 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகி உள்ளது.


Next Story