மணல் திருட்டில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் - கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை


மணல் திருட்டில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவர் - கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை
x
தினத்தந்தி 28 Sep 2018 10:45 PM GMT (Updated: 28 Sep 2018 4:31 PM GMT)

மணல் திருட்டில் ஈடுபடுவோர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள் என்று வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் கதிரவன் எச்சரிக்கை விடுத்தார்.

ஈரோடு,

ஈரோடு மாவட்ட வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலக வளர்ச்சி மன்ற கூட்ட அரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் கதிரவன் தலைமை தாங்கினார். பகல் 11 மணி முதல் 11.30 மணி வரை விவசாயிகள் மனுக்கள் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து பல்வேறு விவசாய சங்க பிரதிநிதிகள் பேசுகையில் கூறியதாவது:–

மாவட்டத்தில் நெல் நடவு முடிந்த பகுதிகளில் முறைநீர் பாசனத்தை அமல்படுத்த வேண்டும். கீழ்பவானி வாய்க்காலில் நீரோட்டத்தை பாதிக்கும் முட்புதர்களை அகற்ற வேண்டும். சிப்காட் பிரச்சினைக்கு அரசும், மாவட்ட நிர்வாகமும் ஒப்புக்கொண்ட தீர்வுகள் 100 நாட்களாகியும் நிறைவேற்றப்படாமல் உள்ளது.

பெரும்பள்ளம் ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். கூட்டுறவுத்துறை கிடங்குகளில் வைக்கப்பட்டுள்ள விளை பொருட்கள் மீது பொருளீட்டு கடன் பெறும்போது மத்திய அரசின் மானியத்தை விவசாயிகள் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. கிராம நிர்வாக அதிகாரிகள் அலுவலகத்தில் உரிய நேரத்தில் இருப்பதில்லை. இதனால் சிட்டா, உரிமை சான்று உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ்கள் வாங்க மிகவும் சிரமமாக உள்ளது.

காலநிலை குறித்த புள்ளி விபரங்களை தொகுத்து விவசாயிகளுக்கு தெரிவிக்க வேண்டும். கூட்டுறவு சங்கத்திற்கு பால் வழங்கிய விவசாயிகளுக்கு வழங்கவேண்டிய நிலுவைத்தொகையை உடனடியாக வழங்க வேண்டும். சொட்டுநீர் பாசன கருவிகளை விவசாயிகளே அமைத்து கொண்டாலும், அதற்கான மானிய தொகையை முழுமையாக வழங்க வேண்டும்.

பவானி ஆற்றில் மணல் திருட்டு நடப்பதை தடுக்க தொடர்ந்து தாசில்தார்கள் கண்காணிக்க வேண்டும். கொடிவேரி அணைப்பகுதியில் கடைகள் அமைக்க அனுமதி வழங்கக்கூடாது. ஈரோடு மாவட்டத்தில் 2 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கரில் பாசனப்பணிகள் நடைபெற்று வருகிறது. இதனால் தற்போது விவசாய தொழிலாளர்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. எனவே, 100 நாள் வேலைவாய்ப்பு திட்டத்தை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.

தொட்டக்கோம்பை பகுதியில் 15 வனக்குடியிருப்புகள் உள்ளன. அங்குள்ளவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படாமல் உள்ளது. எனவே அவர்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வன உரிமைச்சட்டம் குறித்து, வன உரிமைக்குழு உறுப்பினர்களுக்கு பயிற்சி அளிக்க வேண்டும்.

வன பகுதியில் உள்ள வருவாய் தரிசு நிலங்களுக்கு பட்டா வழங்கப்படாததால், அங்குள்ள விவசாயிகள் இழப்பீடு பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தாளவாடி மலைப்பாதையில் கனரக வாகனங்களை அனுமதிப்பதில் கட்டுப்பாடுகளை கொண்டு வர வேண்டும். ஈரோட்டை தலைமையிடமாகக் கொண்டு மஞ்சள் வாரியம் அமைக்க வேண்டும்.

நெல் கொள்முதல் நிலையங்களை வழக்கம் போல் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைப்பகுதி விவசாயிகளிடம் இருந்து மரவள்ளிக்கிழங்குகளை பெறும் ஆலைகள், வெட்டுக்கூலி, வண்டி வாடகை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தட்கல் முறையில் மின் இணைப்பு பெற விண்ணப்பித்தவர்கள் 2 ஆண்டுக்கும் மேல் காத்து இருக்கும் நிலை உள்ளது. எனவே விரைந்து மின் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு கூட்டத்தில் விவசாயிகள் தெரிவித்தனர்.

இதற்கு மாவட்ட கலெக்டர் பதில் அளித்து பேசியபோது கூறியதாவது:–

ஒரு கிலோ பால் பவுடர் தயாரிக்க ரூ.145 செலவாகிறது. ஆனால், சந்தையில் ஒரு கிலோ ரூ.120–க்குத்தான் விற்பனையாகிறது. இதனால், பால் பவுடர் விற்க முடியாமல் தேங்கி உள்ளது. இதன் காரணமாக கூட்டுறவு சங்கத்திற்கு பால் வழங்கிய விவசாயிகளுக்கு நிலுவை தொகை வழங்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

அரசு அறிவித்துள்ள சொட்டுநீர் பாசன நிறுவனங்களை பயன்படுத்தினால் மட்டுமே மானியம் வழங்கப்படும். மணல் திருட்டில் ஈடுபடுவோர் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்கள். திம்பம் சாலையில் வாகனங்களை தணிக்கை செய்து அனுப்புவது தொடர்பாக ஒரு மாதத்தில் புதிய முடிவு அறிவிக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ச.கவிதா மற்றும் விவசாயிகள் பலர் கலந்து கொண்டார்கள்.

வேளாண் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள் தங்கள் பகுதியில் உள்ள குறைகளை விளக்கி பேசினார்கள். அப்போது மாவட்ட கலெக்டர் கதிரவன் விவசாயிகளிடம், தங்கள் பகுதியில் உள்ள குறைகளை சுருக்கமாகவும், தெளிவாகவும் கூறுங்கள். ஒரே பிரச்சினை குறித்து பலரும் பேசாதீர்கள். நேரம் குறைவாக உள்ளதாலும், அனைத்து விவசாயிகளுக்கும் வாய்ப்பு வழங்க வேண்டும் என்பதாலும் ஒரு விவசாயிகள் அதிக பட்சமாக 5 நிமிடங்கள் மட்டுமே எடுத்து கொள்ளுங்கள். அதற்குள் தங்கள் பகுதியில் உள்ள பிரச்சினைகளை கூறி விடுங்கள்’ என்று கூறினார். மேலும் அவர் 5 நிமிடத்துக்கு மேல் விவசாய சங்க பிரதிநிதிகளை பேச அனுமதிக்கவும் இல்லை.

இதனால் விவசாய சங்க பிரதிநிதிகள் அதிக நேரம் பேச அனுமதி வழங்க வேண்டும் என்று கலெக்டரிடம் கோரிக்கை விடுத்தனர்.


Next Story