சுங்கத்துறையினர் அதிரடி; விமானத்தின் இருக்கையில் பதுக்கிய தங்கக்கட்டிகளை கண்டுபிடித்தது எப்படி? மேலும் ஒருவர் கைது
மதுரை விமான நிலையத்தில் விமானத்தின் இருக்கையில் பதுக்கிய தங்கக்கட்டிகளை சினிமா பட பாணியில் சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
மதுரை,
கொழும்புவில் இருந்து நேற்று முன்தினம் மதுரைக்கு வந்த விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்க புலனாய்வுத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் சுங்கத்துறை அதிகாரிகள் நடத்திய சோதனையில் விமானத்தின் இருக்கையின் கீழ் பகுதியில் வைத்து கடத்தி வரப்பட்ட சுமார் ரூ.21¼ லட்சம் மதிப்புள்ள 7 தங்கக்கட்டிகள் சிக்கின. இதுதொடர்பாக கொழும்புவை சேர்ந்த உசைன் அஸ்ரூ (வயது 46) என்பவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தியதில் வெளியான திடுக்கிடும் தகவல்கள் பின்வருமாறு:–
கொழும்புவில் இருந்து மதுரை வழியாக இந்த விமானம் ஐதராபாத் செல்லக்கூடியதாகும். இதில் தங்கம் கடத்தி வருவதாக தகவல் கிடைத்ததன்பேரில் சுங்க புலனாய்வுத்துறை உதவி கமிஷனர் வெங்கடேஷ்பாபு தலைமையில் அதிகாரிகள் விமானத்தில் சோதனை செய்தனர். அப்போது உசைன் அஸ்ரூ பயணம் செய்த இருக்கையின் கீழ் பகுதியில் 700 கிராம் எடை கொண்ட 7 தங்கக்கட்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந்த சம்பவத்தில் வேறு யாருக்காவது தொடர்பிருக்குமோ என்ற கோணத்தில் அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அதில் உசைன் அஸ்ரூ, தங்கக்கட்டிகளை பதுக்கி வைத்திருந்த ‘20 டி‘ என்ற இருக்கையானது விமானத்தின் கடைசி இருக்கையாகும். இதனால் சுங்கத்துறை அதிகாரிகளுக்கு சந்தேகம் அதிகரித்தது. மதுரையில் இருந்து ஐதராபாத்திற்கு செல்ல அந்த ‘20 டி‘ இருக்கையை யாராவது முன்பதிவு செய்திருக்கிறார்களா என்பது குறித்து விமான நிலைய அதிகாரிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் கேட்டனர். அதற்கு அவர்கள், ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியை சேர்ந்த அப்துல் ரகுமான்(27) என்பவர் முன்பதிவு செய்துள்ளதாக தெரிவித்தனர்.
இதனைதொடர்ந்து அப்துல்ரகுமான் விமானத்திற்கு வந்து விட்டாரா என்று கேட்டபோது, அவர் இன்னும் விமானத்திற்குள் வரவில்லை. ஆனால் விமானத்தில் ஏறுவதற்காக வரிசையில் காத்திருப்பதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அப்போது சுங்கத்துறை அதிகாரிகள், நாங்கள் வரும் வரை விமானத்தை இயக்க வேண்டாம் என கூறி அவரை பிடிப்பதற்காக விமானத்தை நோக்கிச் சென்றனர். இதற்கிடையே, அப்துல்ரகுமானின் செல்போனுக்கு ஒரு அழைப்பு வந்தது. இதனை கண்ட சுங்கத்துறை அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு அவரை மடக்கியதோடு செல்போனையும் பறித்து எங்கிருந்து அழைப்பு வந்துள்ளது என்று பார்த்தனர். அவருக்கு வந்த அழைப்பும், உசைன் அஸ்ரூ செல்போனுக்கு வந்த அழைப்பும் ஒரே எண்ணாக இருந்தது. இதனை தொடர்ந்து அப்துல்ரகுமான் சுங்கத்துறை அலுவலகத்திற்கு அழைத்து வரப்பட்டார்.
பின்னர் இருவரிடமும் விசாரித்தபோது அவர்கள் பணத்திற்கு ஆசைப்பட்டு இந்த செயலை செய்ததாக ஒப்புக்கொண்டனர். 700 கிராம் தங்கம் சிக்கிய நிலையில் அவர்களோ, 900 கிராம் தங்கம் கடத்தி வந்ததாக சுங்கத்துறை அதிகாரிகளிடம் கூறினர். இதனால் அதிகாரிகள் மீதமுள்ள 200 கிராம் தங்கம் எங்கே என விசாரித்தனர்.
மேலும் சுங்கத்துறை அதிகாரிகள், அந்த விமானத்தை நிறுத்துவதற்காக முயற்சி எடுத்தனர். ஆனால் அதற்குள் அந்த விமானம் மதுரையில் இருந்து புறப்பட்டு சென்று விட்டது. அதன்பின்னர் மதுரை சுங்கத்துறை அதிகாரிகள், ஐதராபாத் விமான நிலையத்தில் உள்ள சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். மேலும் 200 கிராம் தங்கம் கடத்தி வருவதாக அவர்களிடம் எடுத்து கூறினர். அந்த விமானம் ஐதராபாத்திற்கு சென்றபோது அதில் இருந்து இறங்கிய அனைத்து பயணிகளையும் அதிகாரிகள் சோதனை செய்தனர். ஆனால் அவர்களிடம் தங்கம் ஏதுவும் கிடைக்கவில்லை. அதன்பின்னர் விமானத்தின் உள்ளே சென்று பார்த்தபோது, விமானத்தில் பயணிகளுக்கு வாந்தி வந்தால் பயன்படுத்துவதற்கு கொடுக்கப்படும் பிளாஸ்டிக் பையில் 200 கிராம் எடைகொண்ட 2 தங்கக்கட்டிகள் இருந்தன. அதனை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனைதொடர்ந்து, அப்துல்ரகுமானும் கைது செய்யப்பட்டார்.
வழக்கமாக சினிமா படங்களில் தான் இதுபோன்ற காட்சிகள் இடம்பெறும். அந்த காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு மதுரை விமான நிலையத்தில் சுங்கத்துறையினரின் அதிரடி நடவடிக்கை அரங்கேறி உள்ளது.
பொதுவாக வெளிநாட்டில் இருந்து வரும் பயணிகளை மட்டுமே சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்வார்கள். அதுவே உள்நாட்டிற்குள் செல்லும் விமானங்களாக இருந்தால் அதிக அளவில் சோதனை செய்யமாட்டார்கள். எடுத்துக்காட்டாக மதுரையில் இருந்து பெங்களூரு செல்லும் விமானத்தில் உள்ள பயணிகளை அங்குள்ள சுங்கத்துறையினர் பெரிதளவில் சோதிப்பது கிடையாது. இந்த தகவலை அறிந்த கடத்தல் கும்பல் கொழும்புவில் இருந்து தங்கத்தை மதுரை வழியாக கடத்தி உள்ளது. மதுரையில் இருந்து செல்லும் விமானத்தை ஐதராபாத்தில் சோதனை செய்யமாட்டார்கள் என்பது கடத்தல் கும்பலுக்கு தெரிந்துள்ளது. கடத்தல்காரர்களை விட அதிகாரிகள் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிக்கும் விதமாக செயல்பட்டு கடத்தல்காரர்களையும், தங்கத்தையும் பறிமுதல் செய்துள்ளனர்.