கல்லூரி மாணவ-மாணவிகள் உதவியுடன் ‘டெங்கு’ கொசு ஒழிப்பு பணி - கலெக்டர், ஆணையர் ஆய்வு


கல்லூரி மாணவ-மாணவிகள் உதவியுடன் ‘டெங்கு’ கொசு ஒழிப்பு பணி - கலெக்டர், ஆணையர் ஆய்வு
x
தினத்தந்தி 29 Sep 2018 11:30 PM GMT (Updated: 29 Sep 2018 9:48 PM GMT)

திருச்சி கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் கல்லூரி மாணவ-மாணவிகள் உதவியுடன் மேற்கொள்ளப்படும் ‘டெங்கு’ கொசு ஒழிப்பு பணியை கலெக்டர், ஆணையர் ஆய்வு செய்தனர்.

திருச்சி,

திருச்சி மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பகுதியில் டெங்கு நோய் பரப்பும் ‘ஏடிஸ்’ கொசுக்களை ஒழிக்கும் வகையில் வீடுகளில் உள்ள தேவையில்லாத டயர்கள், காலி டப்பாக்கள், தேங்காய் ஓடுகள், பிளாஸ்டிக் கப்புகள், உடைந்த பழைய பானைகள் ஆகியவற்றில் தண்ணீர் தேங்காமல் அவற்றை அகற்றிட வேண்டும் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில் திருச்சி கோ-அபிஷேகபுரம் கோட்டத்தில் உள்ள 15 வார்டுகளிலும் ‘டெங்கு’ நோய் பரப்பும் கொசு ஒழிப்பு பணி நேற்று நடைபெற்றது.

டெங்கு கொசு ஒழிப்பு பணிக்காக மாநகராட்சி பணியாளர்களுடன் கல்லூரி மாணவ-மாணவிகளும் வீடு, வீடாக சென்று துண்டு பிரசுரங்களை கொடுத்து சுகாதாரம் குறித்து அறிவுரைகளையும் வழங்கினர். மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள், பணியாளர்கள், இளநிலை உதவியாளர்கள், இளநிலை பொறியாளர்கள், சுகாதார மேற்பார்வையாளர்கள், சுகாதார ஆய்வாளர்கள் மற்றும் உயர்நிலை அலுவலர்கள் என 1,600 பேர் இந்த தீவிர கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டனர்.

15 வார்டுகளில் உள்ள 59,222 வீடுகளில் இந்த பணி மேற்கொள்ளப்பட்டது. அப்போது, வீடுகளில் தேவையில்லாத பொருட்களை அப்புறப்படுத்தி ‘அபேட்’ மருந்து தெளித்தும், புகை மருந்து அடித்தும் டெங்கு பாதிப்பு குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களையும் வழங்கினர்.

இந்தபணியினை மாவட்ட கலெக்டர் ராஜாமணி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் ஆகியோர் 56-வது வார்டுக்குட்பட்ட தில்லைநகர் 5-வது குறுக்கு தெரு, செங்குளத்தான்கோவில் தெரு பகுதிகளில் ஆய்வு நடத்தினர்.

அப்போது மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன் கூறுகையில், “பொதுமக்கள் தங்கள் வீடுகள், கல்வி நிலையங்கள், வியாபார நிறுவனங்கள், திருமண மண்டபங்கள், சினிமா திரையரங்குகள், மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் அலுவலக வளாகங்களில் கொசுக்கள் உற்பத்தியாக ஏதுவாக உள்ள தேவையற்ற பழைய உடைந்த உபயோகமற்ற பொருட்களை தங்கள் வீடுகளுக்கு வரும் மாநகராட்சி பணியாளர்களிடம் சாக்கு பையில் மூட்டை களாக கட்டி ஒப்படைக்க வேண்டும்.

அவ்வாறு செய்யாமல் உபயோகமற்ற பொருட்கள் தங்கள் வளாகங்களில் தேக்கி வைத்திருந்து டெங்கு கொசு உற்பத்திக்கு காரணமாக இருப்பது கண்டறியப்பட்டால் வீட்டு உரிமையாளர் மற்றும் குடியிருப்போருக்கு ரூ.500 வரை அபராதம் விதிக்கப்படும்” என்றார்.

இன்று(ஞாயிற்றுக் கிழமை) 2-வது நாளாகவும் தீவிர கொசு ஒழிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.

Next Story