கணியூர் அருகே ஊராட்சி அலுவலக பூட்டை உடைத்து கொள்ளை முயற்சி
கணியூர் அருகே ஊராட்சி அலுவலக பூட்டை உடைத்து மர்ம ஆசாமிகள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது பணம் கிடைக்காததால் அங்கிருந்த ஆவணங்களை வீசிச்சென்றுள்ளனர்.
கணியூர்,
திருப்பூர் மாவட்டம் கணியூர் அருகே காரத்தொழுவு ஊராட்சி உள்ளது. இந்த ஊராட்சி அலுவலகம் கணியூர் காரத்தொழுவு சாலையில் உள்ளது. இந்த அலுவலகம் அருகே கிராம சேவை மையம், நூலகம், அரசு தொடக்கப்பள்ளி அமைந்துள்ளன. காரத்தொழுவு ஊராட்சியில் 9 வார்டுகள் உள்ளன. சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். ஊராட்சி செயலராக ராஜா என்பவர் வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் ஊராட்சி செயலர் நேற்று முன்தினம் பணியை முடித்துவிட்டு ஊராட்சி அலுவலகத்தை பூட்டிவிட்டு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று காலையில் ஊராட்சி அலுவலகத்தை திறக்க உதவியாளர் அன்பரசி சென்றுள்ளார். அப்போது அலுவலக நுழைவு வாயில் கேட் திறந்து கிடந்தது. பின்னர் அலுவலக கதவை திறக்க முற்பட்டபோது அந்த கதவில் போடப்பட்டு இருந்த பூட்டு உடைக்கப்பட்டு, கதவு திறந்து இருந்தது.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர், ஊராட்சி செயலருக்கும், கணியூர் போலீசாருக்கும் தகவல் தெரிவித்தார். உடனே மடத்துக்குளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் மகேந்திரன், கணியூர் போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் சசிக்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் ஊராட்சி அலுவலகத்திற்குள் சென்று பார்த்தபோது அங்கு வைக்கப்பட்டு இருந்த ஆவணங்கள் ஆங்காங்கே சிதறிக்கிடந்தன. நள்ளிரவு நேரம் அலுவலக கதவின் பூட்டை உடைத்து பணத்தை கொள்ளையடிக்க உள்ளே சென்ற ஆசாமிகள்,அங்கு பணம் உள்ளதா? என்று தேடிப்பார்த்துள்ளனர். ஆனால் பணம் ஏதும் கிடைக்காததால் அங்கிருந்த ஆவணங்களை சிதறிப்போட்டு விட்டு சென்று இருப்பது தெரியவந்தது.
இதேபோல் நூலகம், சேவைமையம், தபால் நிலையம் ஆகிய அலுவலகங்களின் பூட்டுகளும் உடைக்கப்பட்டு இருந்தது. இதையடுத்து போலீசார் அந்த அலுவலகங்களுக்கு சென்று பார்த்தபோது, பொருட்கள் எதுவும் கொள்ளை போகவில்லை. ஆனால் அங்கிருந்த பீரோக்கள் திறந்து கிடந்தன. அவற்றில் வைக்கப்பட்டு இருந்த ஆவணங்கள் சிதறிக்கிடந்தன. பல்புகள் உடைக்கப்பட்டு இருந்தது. மேலும் கதவில் உள்ள பூட்டுகளை உடைக்க பயன்படுத்திய அரிவாளை அங்கேயே மர்ம ஆசாமிகள் போட்டு விட்டு சென்று உள்ளனர். அந்த ஆசாமிகள் அலுவலகத்தில் இருந்து கணினி உள்பட எந்த சாதனங்களையும் சேதப்படுத்தவில்லை. அவை அப்படியே இருந்தன.
இதற்கிடையில் அங்கு வந்த ஊராட்சி செயலர்கள் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோஷமிட்டனர். அதைத்தொடர்ந்து மடத்துக்குளம் வட்டார வளர்ச்சி அலுவலர் மாலா மற்றும் ஆணையாளர், துணை வட்டார வளர்ச்சிஅலுவலர்கள் கணியூர் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஊராட்சி அலுவலகம், நூலகம், சேவை மையம் ஆகியவற்றின் கதவின் பூட்டை உடைத்து கொள்ளையடிக்க முயன்ற ஆசாமிகளை தேடி வருகிறார்கள். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.