மடத்துக்குளம் அருகே மினி லாரி மீது கார் மோதல்; 4 பேர் பலி
மடத்துக்குளம் அருகே மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் காரில் பயணம் செய்த 4 பேரும் உயிரிழந்தனர். குலதெய்வ கோவிலுக்கு சாமி கும்பிட சென்றபோது இந்த பரிதாப சம்பவம் நடந்தது.
மடத்துக்குளம்,
கோவை மாவட்டம் பொள்ளாச்சி ஆர்.கே.நகரை சேர்ந்த ஆறுமுகம் என்பவரின் மகன் கிருஷ்ணமூர்த்தி (வயது 33). இவர் பொள்ளாச்சி மார்க்கெட்டில் காய்கறி கமிஷன் மண்டி வைத்து நடத்தி வந்தார். இவருடைய மனைவி கலைவாணி (28). இவர்களுடைய மகள் ஹர்சினி (6). இவர்களுடைய குலதெய்வ கோவிலான அக்னி அம்மன் கோவில் திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் உள்ளது. இந்த கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று சாமி தரிசனம் செய்ய கிருஷ்ணமூர்த்தி முடிவு செய்து இருந்தார்.
அதன்படி ஒரு காரில் கிருஷ்ணமூர்த்தி, அவருடைய மனைவி கலைவாணி மற்றும் மகள் ஹர்சினி ஆகியோர் பொள்ளாச்சியில் இருந்து வேடசந்தூருக்கு நேற்று காலை புறப்பட்டு சென்றனர். காரை பொள்ளாச்சி மரப்பேட்டையை சேர்ந்த மனோஜ்குமார் (30) என்பவர் ஓட்டினார். டிரைவரின் இருக்கை அருகே கிருஷ்ணமூர்த்தி அமர்ந்து இருந்தார். பின் இருக்கையில் கலைவாணியும், சிறுமி ஹர்சினியும் இருந்தனர்.
இந்த கார் கோவை–நாகை தேசிய நெடுஞ்சாலையில் திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த மடத்துக்குளம் அருகே கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள வாய்க்கால்பாலத்தை கடந்து மதியம் 12 மணிக்கு சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே தென்னை நார் பாரம் ஏற்றிய மினி லாரி ஒன்று பொள்ளாச்சி நோக்கி வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில் மனோஜ்குமார் ஓட்டிச்சென்ற கார் கட்டுப்பாட்டை இழந்து திடீரென்று எதிரே வந்து கொண்டிருந்த மினி லாரி மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் கார் உருக்குலைந்து சாலையின் ஓரத்தில் இருந்த பள்ளத்தில் இறங்கியது. இந்த விபத்தில் மினி லாரியின் முன்பகுதி லேசாக சேதம் அடைந்தது.
இதற்கிடையில் விபத்து நடந்த இடத்தில் இருந்து சற்று தொலைவில் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்த மடத்துக்குளம் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்துக்குள்ளான கார் அப்பளம் போல் நொறுங்கி இருந்ததால் காருக்குள் சிக்கியவர்களை மீட்பதில் அவர்களுக்கு சிரமம் ஏற்பட்டது. இதையடுத்து கம்பி மற்றும் இதர சாதனங்களை கொண்டு வந்து கார் கதவை நெம்பி திறந்து காருக்குள் இருந்தவர்களை மீட்க முயன்றனர். ஆனால் இந்த விபத்தில் காருக்குள்ளேயே கிருஷ்ணமூர்த்தி, கலைவாணி, மனோஜ்குமார் ஆகிய 3 பேரும் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே இறந்து இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து அவர்கள் 3 பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அப்போது சிறுமி ஹர்சினிக்கு மட்டும் உயிர் இருந்தது. உடனே அந்த சிறுமியை அவசரமாக மீட்டு ஆம்புலன்சில் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் ஆஸ்பத்திரிக்கு போகும் வழியிலேயே அந்த சிறுமியும் உயிரிழந்தாள். இதையடுத்து அந்த சிறுமியின் உடலையும் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.
இந்த விபத்து குறித்து கிருஷ்ணமூர்த்தியின் உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே அவருடைய உறவினர்கள் உடுமலை அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று இறந்தவர்களின் உடல்களை பார்த்து கதறி அழுதது நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இதற்கிடையில் மினி லாரியை ஓட்டி வந்த டிரைவர் இறங்கி தப்பி ஓடிவிட்டார்.
இதையடுத்து இந்த விபத்து குறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் உள்பட 4 பேர் பலியான சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.