பொள்ளாச்சி ரெயில் நிலையத்துக்கு விரைவில் ஆழியாறு குடிநீர் - மகேந்திரன் எம்.பி.தகவல்


பொள்ளாச்சி ரெயில் நிலையத்துக்கு விரைவில் ஆழியாறு குடிநீர் - மகேந்திரன் எம்.பி.தகவல்
x
தினத்தந்தி 4 Oct 2018 4:45 AM IST (Updated: 4 Oct 2018 12:58 AM IST)
t-max-icont-min-icon

பொள்ளாச்சி ரெயில் நிலையத்துக்கு ஆழியாறு குடிநீர் விரைவில் கொண்டு வரப்படும் என்று மகேந்திரன் எம்.பி. கூறினார்.

பொள்ளாச்சி,

பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் குடிநீர் உள்பட அடிப்படை வசதிகள் இல்லாததால் பயணிகள் சிரமப்படுவதாக மகேந்திரன் எம்.பி.க்கு பல்வேறு தரப்பினரும் மனு கொடுத்தனர். இதையடுத்து பொள்ளாச்சி ரெயில் நிலையத்தில் மகேந்திரன் எம்.பி. ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் பயணிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

மேலும் நடைமேடை பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள குடிநீர் குழாய், கழிப்பிட வசதி உள்ளிட்ட பகுதிகளை பார்வையிட்டார். அப்போது அவரிடம் பொள்ளாச்சி ரெயில் பயணிகள் நலச்சங்கத்தினர் ஒரு மனு கொடுத்தனர். அந்த மனுவில் கோவை செல்லும் பயணிகள் ரெயிலை நிரந்தரமாக்க வேண்டும். ரெயில் நிலையத்துக்கு அம்பராம்பாளையம் ஆழியாற்று தண்ணீரை கொண்டு வர வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது. மனுவை பெற்றுக் கொண்ட அவர் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.ஆய்வுக்கு பின் மகேந்திரன் எம்.பி. கூறியதாவது:–

ரெயில்வே அதிகாரிகள் நகராட்சி அலுவலகத்துக்கு குடிநீர் வழங்குவது தொடர்பாக கடிதம் கொடுக்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. விரைவில் ஆழியாறு குடிநீர் ரெயில் நிலையத்துக்கு கொண்டு வரப்படும். மேலும் கோவை பயணிகள் ரெயில் நிரந்தரமாக்கப்படும். கோவையில் இருந்து பொள்ளாச்சி, திண்டுக்கல், திருச்சி வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரெயில் இயக்க மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த கோரிக்கை மத்திய அரசின் பரிசீலனையில் உள்ளது.

அகலரெயில் பாதை பணிகள் நடைபெறும் போது மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று இருக்க வேண்டும். தற்போது பொள்ளாச்சி–போத்தனூர், பொள்ளாச்சி–பாலக்காடு, பொள்ளாச்சி–திண்டுக்கல் இடையேயான வழித்தடத்தில் ரூ.400 கோடி செலவில் மின் பாதை அமைக்கும் பணிக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. விரைவில் பணிகள் தொடங்க உள்ளது. அகலரெயில் பாதை பணிகள் தொடங்குவதற்கு முன், பொள்ளாச்சி வழியாக இயக்கப்பட்ட அனைத்து ரெயில்களையும் மீண்டும் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

ஆய்வின் போது பாலக்காடு கோட்ட ரெயில்வே என்ஜினீயர் கமல்ராஜ், முன்னாள் நகராட்சி தலைவர் கிருஷ்ணகுமார், பொள்ளாச்சி தொழில் வர்த்தக சபை தலைவர் ஜி.டி.கோபாலகிருஷ்ணன், அ.தி.மு.க. நிர்வாகிகள் அருணாசலம், அருளானந்தம், தினேஷ்குமார், சீனிவாசன், மகேஸ்குமார் மற்றும் பலர் உடன் இருந்தனர்.


Next Story