காங்கிரஸ் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் புதிய திட்டம் கோவையில் தொடங்கப்பட்டது


காங்கிரஸ் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் புதிய திட்டம் கோவையில் தொடங்கப்பட்டது
x
தினத்தந்தி 4 Oct 2018 4:30 AM IST (Updated: 4 Oct 2018 12:59 AM IST)
t-max-icont-min-icon

காங்கிரஸ் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் புதிய திட்டம் கோவையில் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

கோவை,

கோவை மாவட்ட இளைஞர் காங்கிரஸ் சார்பில் தொண்டர்களை ஒருங்கிணைக்கும் ‘யுவ சக்தி’ என்ற புதிய திட்டம் கீதா ஹால் சாலையில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மாநகர் மாவட்ட தலைவர் மயூரா ஜெயக்குமார், வடக்கு மாவட்டத தலைவர் வி.எம்.சி.மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ‘யுவ சக்தி’ பொறுப்பாளரும், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான குமார் ராஜா தலைமை தாங்கி தொடங்கி வைத்து பேசியதாவது:–

காங்கிரஸ் தொண்டர்கள் ஒவ்வொருவருக்கும் ஒரு செல்போன் எண் தரப்படும். அந்த எண்ணுக்கு அவர்களின் வாக்காளர் அடையாள அட்டை எண்ணை குறுந் தகவலாக அனுப்ப வேண்டும். அதில் அனுப்பியவரின் பெயர், வாக்குச்சாவடி எண் உள்பட பல்வேறு விவரங்கள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு அனுப்பி வைக்கப்படும்.

உடனே காங்கிரஸ் தொண்டருக்கு உங்கள் பகுதி பிரச்சினை என்ன? அந்த பிரச்சினை குறித்து பொதுமக்களிடம் எப்படி எடுத்து சொல்ல வேண்டும்? அந்த பிரச்சினைக்கு காரணமானவர்கள் யார்? அதை தீர்ப்பது எப்படி? என்பன போன்ற விவரங்கள் குறுந்தகவல் மூலம் ராகுல் காந்தி கையெழுத்துடன் காங்கிரஸ் தொண்டருக்கு அனுப்பி வைக்கப்படும். இந்த திட்டத்தில் காங்கிரஸ் தொண்டர் மட்டும் அல்லாமல் பொதுமக்களையும் சேர்க்கலாம். இதன் மூலம் காங்கிரஸ் கட்சியில் கூடுதல் உறுப்பினர்களையும் சேர்க்க நிர்வாகிகளும், தொண்டர்களும் முன்வர வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர்கள் நவீன்குமார், குமரேசன், சரவணன், ரகுபதி, நவிசந்த், மாநில செயலாளர்கள் அன்பன், முருகானந்தம் மற்றும் சேவாதள நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story