கல்லட்டி மலைப்பாதையில் நடந்த விபத்தில் 2 பேர் மட்டும் உயிர் தப்பியது எப்படி? மீட்பு குழுவினர் தகவல்
கல்லட்டி மலைப்பாதையில் நடந்த விபத்தில் 2 பேர் மட்டும் உயிர் தப்பியது எப்படி? என்று மீட்பு குழுவினர் தெரிவித்தனர்.
மசினகுடி,
நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள கல்லட்டி மலைப்பாதையில் 34–வது கொண்டை ஊசி வளைவில் வேகமாக சென்ற கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் காருக்குள் இருந்த 5 பேர் பரிதாபமாக இறந்தனர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
விபத்து நடந்த 54 மணி நேரத்துக்கு பின்னரே சென்னையை சேர்ந்த ராமராஜேஷ், அருண் ஆகியோர் மீட்கப்பட்டு உள்ளனர். கார் பள்ளத்தில் பாய்ந்ததும் உருண்டபடி சென்றதால், அந்த கார் நொறுங்கியது. உயிர் தப்பிய 2 பேருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அவர்கள் உயிர் தப்பியது எப்படி? என்பது குறித்து மீட்பு குழுவினர் கூறியதாவது:–
சுற்றுலா பயணிகள் 7 பேர் சென்ற கார் சொகுசு கார் ஆகும். அதில் முன்பக்கத்தில் டிரைவருடன் சேர்ந்து 2 பேரும், அதன் பின்புறத்தில் 2 பேரும், பின்பக்க இருக்கையில் 3 பேர் என்று மொத்தம் 7 பேர் அமரலாம்.
இதில் டிரைவர் இருக்கை அருகே இருந்தவரும், பின்பக்க இருக்கையில் நடுவில் இருந்தவரும் உயிர் தப்பி உள்ளனர். கார் பள்ளத்தில் உருண்டபோது முன்பக்க இருக்கையில் இருந்தவர், இருக்கையின் கீழ்ப்பகுதிக்கு சென்றுவிட்டதால் அவருக்கு ஏற்பட்ட காயங்கள் குறைவு.
அதுபோன்று பின்பக்க இருக்கையில் இருந்த 3 பேரில், நடுவில் இருந்தவருக்கு காயங்கள் குறைவு. அருகில் 2 பேர் இருந்ததால் அவருக்கு அதிகளவில் காயங்கள் ஏற்படவில்லை. இதனால்தான் அவர்கள் இருவரும் உயிர் தப்பி உள்ளனர்.
இந்த காரில் உயிரை காக்கும் பலூன் இருந்தாலும், முன்பக்கத்தில் இருந்தவர் சீட் பெல்ட் அணிய வில்லை என்பதால் அது விரியவில்லை என்று தெரிகிறது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.