நடிகர் விஜய் சர்க்கஸ் காட்டுவதை தொடர்ந்து காட்டுங்கள்; முதல் அமைச்சராக செயல்படுவது சாதாரண காரியமல்ல - அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கடும் தாக்கு
நடிகர் விஜய் சர்க்கஸ் காட்டுவதை தொடர்ந்து காட்டுங்கள் என்றும், முதல்வராக செயல்படுவது சாதாரண காரியமல்ல என்று அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்தார்.
மதுரை,
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் விரைவில் வருவதையொட்டி மதுரை மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதியை சேர்ந்த அ.தி.மு.க. நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் வேலம்மாள் மருத்துவக்கல்லூரி அருகே உள்ள அரங்கில் இன்று(வியாழக்கிழமை) நடைபெற உள்ளது. இதில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் 15 அமைச்சர்கள் கலந்து கொள்கின்றனர். இந்த அரங்கை ஆய்வு செய்த பின்னர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:–
திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ம்ற்கொள்ள வேண்டிய களப்பணிகள் குறித்து முதல்–அமைச்சர், துணை முதல்–அமைச்சர் மற்றும் 15 அமைச்சர்கள் ஆலோசனை வழங்க உள்ளனர். இதில் கலந்து கொள்வதற்காக முதல்–அமைச்சர் இன்று காலை 7 மணிக்கு மதுரை வருகிறார். அவருக்கு அ.தி.மு.க. ஜெயலலிதா பேரவை சார்பில் விமான நிலையத்தில் இருந்து அரங்கம் வரை சிறப்பான வரவேற்பு அளிக்கப்படுகிறது. எதிர்க்கட்சியினர் ஏதாவது பேசி குட்டையை குழப்புகிறார்கள். அவர்கள் மக்களை திசை திருப்பவும், அரசுக்கு கெட்ட பெயர் ஏற்படுத்தவும் எய்ம்ஸ் பிரச்சினையை கையில் எடுத்துள்ளனர். 5 முறை ஆட்சியில் இருந்த தி.மு.க.வினர் தென் மாவட்ட மக்களுக்கு என்ன செய்தார்கள். திருப்பரங்குன்றம் தொகுதி இப்போது தன்னிறைவு பெற்ற தொகுதியாக உள்ளது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதற்கான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. மேலும் அங்கு மண் பரிசோதனை நடைபெற்று கொண்டிருக்கிறது.
வடகிழக்கு பருவமழைக்கு முன்னெச்சரிக்கையாக 4,399 இடங்கள் கண்டறியப்பட்டு மீட்பு குழு அமைக்கப்பட்டு, அவர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது. தங்க தமிழ்ச்செல்வனிடம் நான் ஒன்று கேட்கிறேன். 2011–ல் தேர்தலில் ஜெயலலிதாவிற்காக டி.டி.வி.தினகரன் இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு கேட்டார் என்று ஆதாரம் காட்டினால் நான் அரசியலை விட்டு விலகி விடுகிறேன். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலில் ஒரு லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவது லட்சியம். 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் ஜெயிப்பது நிச்சயம். இரட்டை இலைக்கு உயிர் இல்லை என்று ஒருவர் கூறியிருக்கிறார். அந்த இலைக்கு உயிர் இருக்கிறது என்பதை இந்த திருப்பரங்குன்றம் தொகுதி மக்கள் நிரூபிப்பார்கள். ஜெயலலிதாவின் செல்வாக்கு காரணமாகவே கருணாஸ் வெற்றி பெற்றார். தற்போது அவர் சமுதாய அரசியல் சாயம் பூசி வருகிறார். முதலில் அவரின் பதவி இருக்குமா என்பதை பார்க்கட்டும்.
நடிகர் விஜய் அரசியலில் குதிக்க நினைக்கிறார். அவர் அதில் குதித்து அடிபடாமல் இருந்தால் சமத்து. அரசியல் என்பது பெரிய ஆழம். அதில் எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா தான் ஜெயிக்க முடியும். விஜய்க்கு அரசியல் தெரியவில்லை. ஏதோ சில ரசிகர்கள் வந்தால் அவர் தன்னை எம்.ஜி.ஆர்.போல் நினைத்து கொள்கிறார். தமிழ்நாட்டில் ஒரு அரசியல் ட்ரெண்ட் உருவாகி உள்ளது. யார் வந்தாலும் அ.தி.மு.க. அரசை குறை சொன்னால் அவர்கள் ஹீரோ ஆகி விடுகிறார்கள். யாராவது எழுதிக்கொடுத்த வசனத்தை பேசுவது உங்களுடைய ரோல். அதை சரியாக பாருங்கள். நாங்க தான் நாட்டை சரியாக பார்த்து கொள்கிறோமே. உங்களுக்கு என்ன கவலை. மக்கள் உங்களிடம் விஜய் சார் இந்த நாட்டுல, எதுவுமே சரியில்ல, நீங்க ஏன் நடிக்க போகிறீர்கள். அரசியலுக்கு வாங்க என்று கூப்பிட்டார்களா. விஜய் சொல்கிறார் நான் முதல்வரானால் நடிக்க மாட்டேன் என்று. நீங்கள் முதல்வராக வேஷம் போடலாம். அதை மக்கள் பார்த்து ரசிப்பார்கள். ஆனால் முதல்வராக செயல்படுவது சாதாரண காரியமல்ல. நீங்கள் ஒரு மணி நேரம் வசனம் பேசிவிட்டு 3 மணி நேரம் ஓய்வு எடுப்பவர்கள். எனவே விஜய் சர்க்கஸ் காட்டுவதை தொடர்ந்து காட்டுங்கள். அதில் ஒன்றும் மாற்றுக்கருத்தில்லை. அவரவர் அவர்களின் பணியை செய்வதே நல்லது.
இவ்வாறு அவர் கூறினார்.