பள்ளி மாணவி தற்கொலை முயற்சி: 2–வது நாளாக கல்வி அலுவலர் விசாரணை


பள்ளி மாணவி தற்கொலை முயற்சி: 2–வது நாளாக கல்வி அலுவலர் விசாரணை
x
தினத்தந்தி 4 Oct 2018 3:45 AM IST (Updated: 4 Oct 2018 1:57 AM IST)
t-max-icont-min-icon

அருப்புக்கோட்டை தனியார் பள்ளியில் ஆசிரியை கண்டித்ததால் மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக 2–வது நாளாக கல்வி அதிகாரி விசாரணை மேற்கொண்டார்.

அருப்புக்கோட்டை,

அருப்புக்கோட்டை அருகே உள்ள ஆத்திப்பட்டியைச் சேர்ந்தவர் இருளாண்டி. இவரது மகள் நர்மதா அருப்புக்கோட்டையில் உள்ள தனியார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் பிளஸ்–1 படித்து வருகிறார்.

இவர் கடந்த வாரம் பள்ளி ஆசிரியை கண்டித்ததால் 2–வது மாடியில் இருந்து குதித்து தற்கொலைக்கு முயன்றார். இதில் படுகாயம் அடைந்த அவர் மதுரை தனியார் ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இது தொடர்பாக பள்ளி நிர்வாகம் மற்றும் ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவியின் தந்தை அருப்புக்கோட்டை டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதனிடையே இந்த நிலையில் மாவட்டக் கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி சம்பவம் நடந்த பள்ளிக்கு நேற்று முன் தினம் சென்று விசாரணை நடத்தினார். இதனைத் தொடர்ந்து நேற்றும் 2–வது நாளாக அவர் விசாரணையில் ஈடுபட்டார். தலைமையாசிரியை, ஆசிரியைகள், மாணவிகளிடம் மாணவி தற்கொலை சம்பவம் நடந்த நிகழ்வுகள் குறித்து விசாரித்தார்.

மேலும் கண்காணிப்பு கேமரா பதிவுகளையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். விசாரணை குறித்து கல்வி அலுவலர் கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், “தற்கொலைக்கு முயன்ற மாணவியுடன் படிக்கும் சக மாணவிகள் 40 பேருடன் தனிப்பட்ட முறையில் விசாரணை மேற்கொண்டுள்ளேன். சம்பவத்தின் போது நடந்த நிகழ்வுகள் குறித்து சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியை, தலைமையாசிரியையிடம் எழுத்துப் பூர்வமாக விளக்கம் கேட்டு பெற்றுள்ளேன்.

இனி வரும் காலங்களில் இது போன்ற நிகழ்வுகள் நடைபெறாத வண்ணம் இருக்க மாணவிகளுக்கும், ஆசிரியைகளுக்கும் தனித்தனியாக கவுன்சிலிங் நடத்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. விசாரணை குறித்த விவரங்களை முதன்மைக் கல்வி அலுவலரிடம் பரிந்துரை செய்வோம் என்றார்.


Next Story