மின் இணைப்பு துண்டிப்பால் குடிநீர் கிடைக்காமல் மாணவ, மாணவிகள் அவதி தம்பிதுரையிடம் மக்கள் முறையீடு


மின் இணைப்பு துண்டிப்பால் குடிநீர் கிடைக்காமல் மாணவ, மாணவிகள் அவதி தம்பிதுரையிடம் மக்கள் முறையீடு
x
தினத்தந்தி 3 Oct 2018 10:45 PM GMT (Updated: 3 Oct 2018 8:53 PM GMT)

மின் இணைப்பு துண்டிப்பால் குடிநீர் கிடைக்காமல் மாணவ, மாணவிகள் அவதிக்குள்ளாகி வருவதாக தம்பிதுரையிடம் பொது மக்கள் முறையிட்டனர்.

கரூர்,

கரூர் மாவட்டம் தாந்தோன்றி மேற்கு ஒன்றியம் மூக்கணாங்குறிச்சி ஊராட்சிக்குட்பட்ட சின்னமநாயக்கன்பட்டி, பெரியார்நகர், வீரணம்பாளையம், பால்வார்பட்டி, வரப்பட்டி, கன்னிமார்பட்டிஉள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது. இதில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை கலந்து கொண்டு, பொதுமக்களை நேரடியாக சந்தித்து பல்வேறு கோரிக்கைகள் தொடர்பான மனுக்களை பெற்றார். பின்னர் அந்த பகுதியில் அடிப்படை வசதிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

கரூர் அருகே வீரணாம்பாளையம் பகுதியில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தமிழக கவர்னர் பன்வாரிலால் புரோகித் ஆய்வு மேற்கொள்ள வந்தார். இதையொட்டி அந்த பகுதியிலுள்ள ஒரு அரசு தொடக்கப்பள்ளியில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் புதிதாக மின்மோட்டாருடன் கூடிய ஆழ்துளை கிணறு ஒன்று அமைக்கப்பட்டது. மேலும் அருகிலுள்ள மின்கம்பத்தில் இருந்து அதற்கு மின் இணைப்பு தற்காலிகமாக கொடுக்கப்பட்டது. இந்த நிலையில் அந்த மின் இணைப்பு தற்போது துண்டிக்கப்பட்டதால் பள்ளி மாணவ, மாணவிகள் தண்ணீர் வசதியில்லாமல் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இந்த நிலையில் அங்கு நேற்று கோரிக்கை மனு பெறுவதற்காக வந்த பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரையை சந்தித்து, பொதுமக்கள் இந்த கோரிக்கை குறித்து முறையிட்டனர். அப்போது உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொண்ட தம்பிதுரை, இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

அதனைத்தொடர்ந்து, கே.பிச்சம்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளிலும் மனுக்கள் பெறும் நிகழ்ச்சி நடந்தது.

இந்த நிகழ்ச்சியின் போது கிருஷ்ணராயபுரம் தொகுதி எம்.எல்.ஏ. கீதா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் எஸ்.கவிதா,வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய நிர்வாக பொறியாளர்(ஊரகம்) முத்துமாணிக்கம், கூட்டுறவு சங்க பிரதிநிதி என்.எஸ்.கிருஷ்ணன், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் தங்கமணி, பொறியாளர் மூர்த்தி, வட்டாட்சியர் ஈஸ்வரன், (கரூர்) உட்பட பலர் உடன் இருந்தனர்.

முன்னதாக, மூக்கணாங்குறிச்சி பகுதியில் பாராளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

வருகிற தேர்தலை கருத்தில் கொண்டு மக்களை சந்திப்பவன் நான் அல்ல. வருகிற தேர்தலில் கரூரில் எனக்கு சீட்டு கொடுப்பது பற்றி கட்சி தான் முடிவு எடுக்கும். உலகதமிழ்மாநாட்டை அரசின் பணத்தில் தான் தி.மு.க. நடத்தியது.

அண்ணா பிறந்தாள் உள்ளிட்டவையும்அரசு விழாவாக தான் நடந்தது. அந்த வகையில் 3 முறை தமிழக முதல்-அமைச்சராக இருந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினை அரசு சார்பில் தான் செய்ய வேண்டும். மத்திய அரசு திட்டங்களுக்காக ஆய்வு நடத்துவது வேறு. ஆனால் ஹைட்ரோ கார்பன் உள்ளிட்ட திட்டத்திற்கு தமிழக அரசு தான் அனுமதி தர வேண்டும். அந்த வகையில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படு கிறது என்றால், அந்த திட்டத்திற்கு அ.தி.மு.க. அரசு அனுமதி அளிக்காது. விவசாயிகளின் நலம் தான் முக்கியமே தவிர, தனிப்பட்ட முறையில் தொழிலதிபர்கள் உள்ளிட்டோர் பணம் சம்பாதிப்பதற்கான திட்டத்திற்கு தமிழக அரசு உறுதுணையாக இருக்காது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story