மின்வெட்டை கண்டித்து சிவா எம்.எல்.ஏ. திடீர் சாலை மறியல்


மின்வெட்டை கண்டித்து சிவா எம்.எல்.ஏ. திடீர் சாலை மறியல்
x
தினத்தந்தி 4 Oct 2018 5:53 AM IST (Updated: 4 Oct 2018 5:53 AM IST)
t-max-icont-min-icon

மின்வெட்டை கண்டித்து திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட சிவா எம்.எல்.ஏ. உள்பட 100–க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட அண்ணா சாலை, கோவிந்தசாலை, கண்டாக்டர் தோட்டம் ஆகிய பகுதிகளில் அடிக்கடி மின்வெட்டு ஏற்படுகிறது. நேற்று மாலை 6 மணிக்கு மின்வெட்டு ஏற்பட்டு இரவு 9 மணி வரை மின் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் இது குறித்து தொகுதி எம்.எல்.ஏ. சிவாவிடம் புகார் தெரிவித்தனர். உடனே அவர் அந்த மக்களுடன் சேர்ந்து அண்ணா சாலைக்கு வந்தார்.

அங்கு அண்ணா சிலை அருகில் திடீர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார். இந்த போராட்டத்தில் தி.மு.க. நிர்வாகிகள், அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள், பெண்கள் பலர் கலந்து காண்டனர். அப்போது அவர்கள் உருளையன்பேட்டை பகுதியில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினர். அவர்கள் அண்ணா சிலையை சுற்றி சாலையில் 4 புறமும் மோட்டார் சைக்கிளை நிறுத்தி வைத்திருந்தனர்.

இது பற்றிய தகவல் அறிந்த ஒதியஞ்சாலை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்–இன்ஸ்பெக்டர் நாராயணசாமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட சிவா எம்.எல்.ஏ.விடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அவர் போராட்டத்தினை கைவிடவில்லை. இதையடுத்து மின்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து வந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரசம் பேசினர்.

அப்போது அவர்கள் விரைவில் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி கூறினர். இருப்பினும் அவர்கள் போராட்டத்தினை கைவிடவில்லை. இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட சிவா எம்.எல்.ஏ. உள்பட 100–க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்களை சிறிது நேரத்தில் விடுவித்தனர்.

இந்த போராட்டம் காரணமாக அண்ணாசாலை பகுதியில் சுமார் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.


Next Story