பெங்களூருவில், சித்தராமையா வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் போராட்டம்


பெங்களூருவில், சித்தராமையா வீட்டின் முன்பு ஆதரவாளர்கள் போராட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2018 5:54 AM IST (Updated: 4 Oct 2018 5:54 AM IST)
t-max-icont-min-icon

சங்கமேஸ்வர் எம்.எல்.ஏ.வுக்கு மந்திரி பதவி வழங்க கோரி பெங்களூருவில் உள்ள சித்தராமையாவின் வீட்டின் முன்பு சங்கமேஸ்வர் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர்.

சிவமொக்கா,

கர்நாடகத்தில் காங்கிரஸ், ஜனதாதளம்(எஸ்) கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக குமாரசாமியும், துணை முதல்-மந்திரியாக பரமேஸ்வரும் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் மந்திரிசபையில் 7 இடங்கள் காலியாக உள்ளன. அதில் காங்கிரசுக்கு 6 இடங்களும், ஜனதாதளம்(எஸ்) கட்சிக்கு ஒரு இடமும் உள்ளது. மந்திரிசபையில் காலியாக உள்ள இடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் தொடர்ந்து கட்சியின் தலைவர்களை வலியுறுத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் வருகிற 12-ந் தேதிக்கு கர்நாடக மந்திரிசபை விரிவாக்கம் செய்யப்படும் என்று தெரிகிறது. இதனால் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பலர் தங்களுக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்று கட்சியின் தலைவர்களிடம் கேட்டு வருகிறார்கள்.

இந்த நிலையில் சிவமொக்கா மாவட்டம் பத்ராவதி தொகுதியில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சங்கமேஸ்வர் எம்.எல்.ஏ.வும் தனக்கு மந்திரி பதவி வேண்டும் என்று கட்சியின் தலைவர்களிடம் கேட்டு வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பெங்களூருவில் உள்ள முன்னாள் முதல்-மந்திரியும், கூட்டணி கட்சியின் ஒருங்கிணைப்பு குழு தலைவருமான சித்தராமையாவின் வீட்டின் முன்பு சங்கமேஸ்வர் எம்.எல்.ஏ.வின் ஆதரவாளர்கள், சங்கமேஸ்வருக்கு மந்திரி பதவி வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர். போராட்டத்தின் போது சங்கமேஸ்வர் எம்.எல்.ஏ.வுக்கு ஆதரவாக தொண்டர்கள் உற்சாகமாக கோஷங்கள் எழுப்பினர்.

இதுபற்றி அறிந்த போலீசார் அங்கு சென்று போராட்டம் நடத்தியவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி அங்கிருந்து அனுப்பி வைத்தனர்.

Next Story