தற்செயல் விடுப்பு எடுத்து நாகர்கோவில் உள்பட 3 இடங்களில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்


தற்செயல் விடுப்பு எடுத்து நாகர்கோவில் உள்பட 3 இடங்களில் ஜாக்டோ–ஜியோ அமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2018 11:00 PM GMT (Updated: 4 Oct 2018 3:04 PM GMT)

குமரி மாவட்டத்தில் ஜாக்டோ– ஜியோ அமைப்பினர் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்து நாகர்கோவில் உள்ளிட்ட 3 இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

நாகர்கோவில்,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், இடைநிலை–முதுநிலை ஆசிரியர்களுக்கான ஊதிய முரண்பாடுகளுக்கு தீர்வு காண வேண்டும், ஒப்பு கொண்டபடி சிறப்பு காலமுறை ஊதியம் பெறுபவர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கப்பட வேண்டும், ஜனவரி 2016 முதல் ஊதிய மாற்ற நிலுவை தொகையை வழங்க வேண்டும், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பை பறித்து, பணியிடங்களை தனியாருக்கு தாரைவார்க்கும் பணியாளர் பகுப்பாய்வு குழு அமைத்ததை கண்டித்தும், 5 ஆயிரம் அரசு பள்ளிகளை மூட முயற்சிக்கும் அரசின் நடவடிக்கையை கண்டித்தும் ஜாக்டோ– ஜியோ (தமிழ்நாடு ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் அமைப்புகள் இணைந்த கூட்டு நடவடிக்கைக்குழு) சார்பில் நேற்று தமிழகம் முழுவதும் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்து நடத்தும் போராட்டம் நடந்தது.

இதேபோல் குமரி மாவட்டத்திலும் ஜாக்டோ–ஜியோ அமைப்பு சார்பில் போராட்டம் நடந்தது. இதனால் ஆசிரியர்கள் பள்ளி– கல்லூரிகளுக்கு செல்லாமல் ஒருநாள் தற்செயல் விடுப்பு எடுத்தும், வருவாய்த்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அரசு ஊழியர்கள் அலுவலகங்களுக்கு செல்லாமல் ஒரு நாள் தற்செயல் விடுப்பு எடுத்தும் போராட்டம் நடத்தினர்.

இதனால் நாகர்கோவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள வருவாய்த்துறை அலுவலகம், ஊரக வளர்ச்சித்துறை, கூட்டுறவுத்துறை, கால்நடைத்துறை ஆய்வாளர்கள் அலுவலகம் உள்ளிட்ட பல்வேறு அரசுத்துறை அலுவலகங்களில் ஊழியர்கள் குறைந்த அளவிலேயே பணிக்கு வந்திருந்தனர். இதனால் ஊழியர்கள் இன்றி அலுவலகங்கள் வெறிச்சோடி கிடந்தன.

இந்த போராட்டத்தையொட்டி நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் தியாகராஜன், பகவதியப்பபிள்ளை ஆகியோர் தலைமை தாங்கினர். ஜாக்டோ– ஜியோ உயர்மட்டக்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், ஆசிரியர் மற்றும் பல்வேறு துறை ஊழியர் சங்கங்களின் நிர்வாகிகள் விமல சங்கர், நாகராஜன், எட்வின் பிரகாஷ், வினீத், சுமதி, மூர்த்தி, கோலப்பன் உள்பட பலர் போராட்டத்தை விளக்கி பேசினர். மூட்டா மத்திய செயற்குழு உறுப்பினர் மனோகர ஜஸ்டஸ் நிறைவுரையாற்றினார். முடிவில் ஜாக்டோ– ஜியோ நிதி காப்பாளர் கிறிஸ்டோபர் நன்றி கூறினார்.

இதேபோல் தக்கலையில் உள்ள கல்குளம் தாலுகா அலுவலகம் முன் நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு ஜாக்டோ– ஜியோ ஒருங்கிணைப்பாளர் கனகராஜ், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில செயலாளர் ராஜ்குமார் ஆகியோர் தலைமை தாங்கினர். குழித்துறையில் உள்ள விளவங்கோடு தாலுகா அலுவலகம் முன் ஜாக்டோ– ஜியோ குழித்துறை கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் விஜயராஜ் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இந்த போராட்டம் குறித்து ஜாக்டோ– ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளர் தியாகராஜன் கூறும்போது, “ குமரி மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் சுமார் 18 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களில் 2 ஆயிரம் பேர் இந்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்“ என்றார்.

Next Story