அரசு பள்ளிகளில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை
ஈரோடு மாவட்டத்தில் அரசு பள்ளிக்கூடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது.
ஈரோடு,
வருகிற ஜனவரி மாதம் முதல் பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கவும், பயன்படுத்தவும் தடை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டு உள்ளது. அதன்படி முதல் கட்டமாக அரசு அலுவலகங்களில் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு குறைக்கப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கூடங்களில் ஆசிரியர்கள், மாணவ-மாணவிகள் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி பாலமுரளி உத்தரவிட்டு உள்ளார். இதைத்தொடர்ந்து அரசு பள்ளிக்கூடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக்கூடாது என்று மாணவ-மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்த நிலையில் ஈரோடு அரசு மகளிர் மேல்நிலை பள்ளிக்கூடத்தில் நேற்று காலை மாணவிகள் பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு வருகிறார்களா? என்று சோதனை நடத்தப்பட்டது. பள்ளிக்கூடத்தின் நுழைவு வாயில் பகுதியில் தலைமை ஆசிரியை சுகந்தி தலைமையில் மாணவிகள் சிலர் நின்றுகொண்டு பள்ளிக்கூடத்திற்கு வரும் மாணவிகளின் புத்தகப்பைகளை வாங்கி சோதனையிட்டனர். அப்போது ஒருமுறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் தண்ணீர் பாட்டில், மதிய உணவு கொண்டு வருவதற்காக பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் போன்ற பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
மழை தூறிக்கொண்டே இருந்ததால் மாணவிகள் பலர் நனையாமல் இருக்க பிளாஸ்டிக் பைகளை தலையில் போட்டுக்கொண்டு வந்தனர். அதுவும் பறிமுதல் செய்யப்பட்டன. இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை ஒரு மூட்டையில் கட்டி வைத்தனர்.
இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறும்போது, “பள்ளிக்கூடங்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக மாணவ-மாணவிகளிடம் ஏற்கனவே அறிவுறுத்தி உள்ளோம். மேலும், பெற்றோர்களிடமும் பிளாஸ்டிக் பொருட்களை கொடுத்து அனுப்ப வேண்டாம் என்று கூறி உள்ளோம். பிளாஸ்டிக் இல்லாத அரசு பள்ளிக்கூடங்களை உருவாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது. இதனால் பள்ளிக்கூடங்களில் 90 சதவீதம் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்து விட்டது”, என்றார்.
Related Tags :
Next Story