புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை: பஸ்சுக்குள் ஒழுகியதால் குடைபிடித்து சென்ற பயணிகள்


புதுக்கோட்டை மாவட்டத்தில் மழை: பஸ்சுக்குள் ஒழுகியதால் குடைபிடித்து சென்ற பயணிகள்
x
தினத்தந்தி 5 Oct 2018 4:15 AM IST (Updated: 5 Oct 2018 1:53 AM IST)
t-max-icont-min-icon

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையின் காரணமாக அம்மாபட்டினம் டெலிபோன் அலுவலகத்துக்குள் தண்ணீர் புகுந்தது. மழைநீர் ஒழுகியதால் பஸ்சுக்குள் பயணிகள் குடை பிடித்து சென்றனர்.

புதுக்கோட்டை,

புதுக்கோட்டை, அறந்தாங்கி, ஆவுடையார்கோவில், விராலிமலை, அன்னவாசல், இலுப்பூர், திருமயம், ஆலங்குடி, கந்தர்வகோட்டை, பொன்னமராவதி, திருவரங்குளம், மணமேல்குடி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் மழை பெய்து வருகிறது. நேற்றும் பரவலாக மழை பெய்தது. இதனால் நேற்று புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு இருந்தது.

மணமேல்குடி, கட்டுமாவடி, கோட்டைப்பட்டினம், ஜெகதாபட்டினம், மீமிசல் உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்தது. இதனால் கடற்கரை ஓரங்களில் வசிக்கும் மக்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். நாட்டுப்படகு மீனவர்கள் கடலுக்குள் செல்லவில்லை.

மழை காரணமாக அம்மாபட்டினத்தில் உள்ள டெலிபோன் அலுவலகத்துக்குள் மழைநீர் புகுந்தது. இதனால் மணமேல்குடி பகுதியில் டெலிபோன் சேவை முற்றிலும் பாதிக்கப்பட்டது.

ஆவுடையார்கோவில் பகுதியில் நேற்று காலையில் பரவலாக மழை பெய்து கொண்டிருந்தது. அப்போது அறந்தாங்கியில் இருந்து ஆவுடையார்கோவில் வழியாக பெருமருதூர் வரை சென்ற அரசு பஸ்சின் மேற்கூரையில் ஆங்காங்கே சேதமடைந்து இருந்ததால், பஸ்சின் உள்ளே மழைநீர் ஒழுகியது. இதனால் பஸ்சில் பயணம் செய்த சிலர் குடைபிடித்தபடியே பயணம் செய்தனர்.

இதுகுறித்து போக்குவரத்து துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து சேதமடைந்த அறந்தாங்கி-பெருமருதூர் அரசு டவுன் பஸ்சிற்கு பதிலாக புதிய பஸ் இயக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்தனர்.

புதுக்கோட்டை மாவட்டத்தில் பெய்த மழையளவு மில்லி மீட்டரில் வருமாறு:

புதுக்கோட்டை-21, ஆதனக்கோட்டை-39, பெருங்களூர்-31.80, ஆலங்குடி-24.20, கந்தர்வகோட்டை-35.10, கறம்பக்குடி-28, மழையூர்-49, கீழாநிலை-49.20, திருமயம்-18.20, அரிமளம்-6.40, அறந்தாங்கி-35, ஆயிங்குடி-16.80, நாகுடி-7.20, மீமிசல்-62.20, ஆவுடையார்கோவில்-17.20, மணமேல்குடி-36, கட்டுமாவடி-45, இலுப்பூர்-10, குடுமியான்மலை-11, அன்னவாசல்-20, விராலிமலை-5.20, உடையாளிப்பட்டி-46.60, கீரனூர்- 27.40, பொன்னமராவதி-16.20, காரையூர்-26.40. அதிகபட்சமாக மீமிசலில் 62.20 மில்லி மீட்டரும், குறைந்தபட்சமாக விராலிமலையில் 5.20 மில்லி மீட்டர் மழையும் பதிவாகி இருந்தது.

Next Story