கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்


கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள்-அரசு ஊழியர்கள் கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 4 Oct 2018 11:00 PM GMT (Updated: 4 Oct 2018 8:35 PM GMT)

கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து கொட்டும் மழையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

புதுக்கோட்டை,

புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். 21 மாத நிலுவை தொகையினை வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள் மற்றும் பகுதி நேர சிறப்பாசிரியர்களுக்கு தொகுப்பூதியம் வழங்க வேண்டும். கணினி ஆசிரியர்களுக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும்.

5 ஆயிரம் அரசு பள்ளிகள் மூடுவதை உடனடியாக கைவிட வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ-ஜியோ அமைப்பின் சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று ஒட்டுமொத்த தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி தமிழகம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டத்தில் நடைபெற்ற போராட்டத்தில் சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்து போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

அதன்படி புதுக்கோட்டை அரசு பொது அலுவலக வளாகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஜாக்டோ- ஜியோ அமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ரெங்கசாமி, ராஜாங்கம், செல்வராசு ஆகியோர் தலைமையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற மாநில துணை செயலாளர் சண்முகநாதன் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து பேசினார். ஆர்ப்பாட்டம் நடைபெற்றபோது மழை பெய்து கொண்டிருந்தது. ஆனால், கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் குடை பிடித்தப்படி ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.

இதேபோல ஆலங்குடி தாலுகா அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி செபஸ்தியான் தலைமை தாங்கினார். இதில் அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டு கோரிக்கைகள் குறித்து கோஷங்களை எழுப்பினார்கள். இதேபோல கீரனூரில் உள்ள குளத்தூர் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

அறந்தாங்கி தாலுகா அலுவலகம் முன்பு வட்ட தலைவர் காமராஜ் தலைமையிலும், திருமயம் தாலுகா அலுவலகம் முன்பு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற செயலாளர் சேது தலைமையிலும், விராலிமலை தாலுகா அலுவலகம் முன்பு வட்டார தலைவர் ஜான்மரியஜோசப் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆவுடையார்கோவில் தாலுகா அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. கறம்பக்குடி தாலுகா அலுவலகம் முன்பு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி வட்டார தலைவர் பால்கென்னடி தலைமையிலும், கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட தலைவர் ரவி தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story