கல்லட்டி மலைப்பாதையில் நடந்த விபத்தில் பலி: 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு


கல்லட்டி மலைப்பாதையில் நடந்த விபத்தில் பலி: 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைப்பு
x
தினத்தந்தி 5 Oct 2018 4:12 AM IST (Updated: 5 Oct 2018 4:12 AM IST)
t-max-icont-min-icon

கல்லட்டி மலைப்பாதையில் நடந்த விபத்தில் பலியான 5 பேரின் உடல்கள் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

ஊட்டி,

தூத்துக்குடி முத்தம்மாள் காலனி 8-வது தெருவை சேர்ந்தவர் ஜூடு அண்டோ கெவின் (வயது 34), கப்பல் கேப்டன். இவர் தனது நண்பர்களான சென்னையை சேர்ந்த ராம ராஜேஷ் (38), இப்ராகிம் (35), அருண் (38), ரவி வர்மா (37), ஜெயக்குமார் (36), அமர்நாத் (36) ஆகியோருடன் காரில் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். கடந்த 1-ந் தேதி ஊட்டியில் தங்கும் விடுதியில் இருந்து மசினகுடி பகுதியை சுற்றி பார்க்க காரில் சென்றனர். காரை ஜூடு அண்டோ கெவின் ஓட்டினார். கல்லட்டி மலைப்பாதையில் 34-வது கொண்டை ஊசி வளைவில் கார் கட்டுப்பாட்டை இழந்து 200 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் ஜூடு அண்டோ கெவின், இப்ராகிம், ரவி வர்மா, ஜெயக்குமார், அமர்நாத் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் ராம ராஜேஷ், அருண் ஆகியோர் விபத்து நடந்து 54 மணி நேரத்துக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்டனர். படுகாயம் அடைந்துள்ள 2 பேருக்கும் ஆஸ்பத்திரியில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே பலியான 5 பேரின் உடல்களும் ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு வரப்பட்டது. ஊட்டிக்கு சுற்றுலா வந்த இடத்தில் கார் விபத்தில் இறந்த 5 பேர் குறித்து அவர்களது உறவினர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் சென்னை மற்றும் தூத்துக்குடியில் இருந்து நேற்று முன்தினம் இரவோடு, இரவாக ஊட்டிக்கு வந்தனர்.

இந்த நிலையில் நேற்று காலை ஊட்டி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள பிணவறை முன்பு உறவினர்கள் அழுதபடி சோகத்தில் நின்று இருந்தனர். பின்னர் விபத்தில் இறந்த 5 பேரின் உடல்கள் ஒவ்வொன்றாக பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. மேலும் அந்த உடல்கள் தனித்தனி ஆம்புலன்சில் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. கப்பல் கேப்டன் ஜூடு அண்டோ கெவினின் சித்தப்பா மகன் சாமுவேல் கூறியதாவது:-

எனது அண்ணன் ஜூடு அண்டோ கெவின் தனியார் கப்பல் கேப்டனாக கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்தார். கப்பலில் பணிபுரிந்து விட்டு, மாத விடுமுறை கிடைக்கும் சமயங்களில் அவர் தனது நண்பர்களை அழைத்து சுற்றுலா செல்வது வழக்கம். அவர் நண்பர்களுடன் அன்பாக பேசி பழகுவதுடன், தமிழகத்தில் பல்வேறு இடங்களுக்கு சுற்றுலாவுக்கு அழைத்து சென்று உள்ளார். அதேபோல் தான் கடந்த 30-ந் தேதியும் ஊட்டிக்கு சுற்றுலா வந்தார். இந்த நிலையில் ஜூடு அண்டோ கெவினின் செல்போனை தொடர்பு கொள்ள முடியாமல் போனது. நேற்று முன்தினம் மதியம் அண்ணன் உள்பட 7 பேரை காணவில்லை என்ற தகவல் எங்களுக்கு கிடைத்தது. நாங்கள் உடனே புறப்பட்டு ஊட்டிக்கு வந்தோம். ஆனால் இங்கு விபத்தில் இறந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நான் கோவையில் அரசு தொழில்நுட்ப கல்லூரியில் இறுதியாண்டு படித்து வருகிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Next Story