தொளார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 5 லட்சம் கையாடல்: 3 பேர் கைது


தொளார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ. 5 லட்சம் கையாடல்: 3 பேர் கைது
x
தினத்தந்தி 4 Oct 2018 10:42 PM GMT (Updated: 4 Oct 2018 10:42 PM GMT)

தொளார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் ரூ.5¼ லட்சம் கையாடல் செய்ததாக முன்னாள் செயலாளர் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

கடலூர், 

திட்டக்குடி அருகே தொளாரில் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் உள்ளது. இந்த சங்கத்தில் கடந்த 1.4.2016 முதல் 31.7.2017 வரையுள்ள கால கட்டத்தில் அதே பகுதியை சேர்ந்த கனகசபை தலைவராகவும், முருகானந்தம் (வயது 54) செயலாளராகவும், செல்வராஜ் எழுத்தராகவும், மூப்பன், பூமாலை ஆகியோர் உறுப்பினர்களாகவும் செயல்பட்டு வந்தனர்.

இதுதவிர தொளார் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்குட்பட்ட ரேஷன் கடைகளில் செல்வராஜ் (57), கந்தவேல் (53), கோபாலகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் விற்பனையாளராக பணியாற்றி வந்தனர்.

இதில் கனகசபை, முருகானந்தம், எழுத்தர் செல்வராஜ், மூப்பன், பூமாலை ஆகியோர் சங்க சேமிப்பு கணக்கில் இருந்து கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் பணத்தை எடுத்து, கணக்கில் கொண்டு வராமலும், நிர்வாகக்குழு உறுப்பினர்களுக்கு அமர்வு கட்டணம் வழங்கியதாகவும், உர விற்பனை தொகையை செலுத்தாமலும், போலியான ரசீது தயார் செய்தும், ரேஷன் கடை விற்பனையாளர்கள் செல்வராஜ், கந்தவேல், கோபாலகிருஷ்ணன், ராஜேந்திரன் ஆகியோர் பொருட்களின் இருப்பை குறைத்து காட்டி, விற்பனையான பணத்தை சங்கத்தில் கட்டாமலும் மொத்தம் ரூ.5 லட்சத்து 24 ஆயிரத்து 110-ஐ கையாடல் செய்ததாக தெரிகிறது.

இதை விருத்தாசலம் கூட்டுறவு சங்கங்களின் துணை பதிவாளர் சாய்குமாரி தணிக்கையின் போது கண்டுபிடித்தார். பின்னர் அவர் இது பற்றி கடலூர் வணிகவியல் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசில் புகார் செய்தார்.

அதன்பேரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கலாவதி, சப்-இன்ஸ்பெக்டர் ரவிசங்கர், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் புகழேந்தி, ஜோதிலிங்கம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து, முன்னாள் செயலாளர் முருகானந்தம், விற்பனையாளர்கள் செல்வராஜ், கந்தவேல் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மற்ற 6 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர். 

Next Story