புதுவையில் மின்சாரம் திருட்டு கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் புகார்


புதுவையில் மின்சாரம் திருட்டு கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் புகார்
x
தினத்தந்தி 4 Oct 2018 11:57 PM GMT (Updated: 4 Oct 2018 11:57 PM GMT)

அதிகாரிகள் உடந்தையுடன் புதுவையில் மின்சாரம் திருடப்படுகிறது என்று கருத்துக்கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

புதுச்சேரி,

புதுச்சேரி லப்போர்த் வீதியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் வர்த்தக திட்டம் குறித்து மின்சார ஒழுங்குமுறை ஆணையம் சார்பில் நேற்று பொதுமக்களிடம் கருத்துக் கேட்பு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மின்சார ஒழுங்குமுறை ஆணைய தலைவர் கோயல் தலைமை தாங்கினார். ஆணைய உறுப்பினர் செயலர் நீர்ஜா மத்தூர் முன்னிலை வகித்தார். இதில் மின்துறை கண்காணிப்பு பொறியாளர் ரவி உள்பட மின்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பொதுமக்கள் அளித்த புகார்கள் வருமாறு:- புதுவை மாநிலத்தில் கடந்த காலங்களில் மற்ற மாநிலங்களை விட மிகவும் குறைவான மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது. தற்போது புதுவையில் மின் கட்டணம் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

புதுச்சேரியில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக மட்டும் மின் இழப்பு ஏற்படுவதில்லை. மின் திருட்டும் நடக்கிறது. சில அதிகாரிகள் இதற்கு உடந்தையாக இருக்கிறார் கள். புதிதாக பொருத்தப்பட்டுள்ள ஸ்மார்ட் மீட்டர் மூலம் மின் கட்டணம் அதிக அளவில் வசூலிக்கப்படுவதாக அனைத்து தரப்பினரும் புகார் தெரிவிக்கிறார்கள். இது குறித்து தெளிவுபடுத்த வேண்டும்.

பொதுமக்கள் தங்களின் மின் கட்டணத்தை 1-ந் தேதியில் இருந்து 10-ந் தேதிக்குள் செலுத்த மின்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். பல வருடங்களாக வைத்துள்ள கட்டண பாக்கியை வசூலிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

வில்லியனூரில் உள்ள இயக்குதல் மற்றும் பராமரித்தல் அலுவலகத்தை 2 ஆக பிரிக்க வேண்டும். தானே புயலின் போது நகரின் மையப் பகுதியான காமராஜர் சாலையில் 2 மின் கம்பங்கள் சேதமடைந்தன. அதற்கு பதில் அங்கு புதிதாக மின் கம்பங்கள் அமைக்கப்படவில்லை என்பது உள்பட பல்வேறு குறைகளை பொதுமக்கள் தெரிவித்தனர்.

கூட்டத்தில் பல்வேறு அரசியல் கட்சியின் பிரமுகர்கள், தன்னார்வலர் மற்றும் பலர் கலந்துகொண்டனர். அப்போது அதிகாரிகளுடன் சிலர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரியில் மின் பங்கீட்டை முறைப்படுத்துவதற்கும், உரிய விலைக்கு விற்பதற்கும் கோவா மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கான இணை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் 2019 முதல் 2022 வரை 3 ஆண்டுகளுக்கான வர்த்தக திட்ட ஒப்புதலுக்கான விண்ணப்பத்தை புதுச்சேரி மின்துறை கடந்த 31.8.2018 அன்று சமர்ப்பித்தது.

இதில் புதிய துணை மின் நிலையம் அமைத்தல், மின் விரிவாக்க திட்டங்கள், நவீனமயமாக்கல், மின் பகிர்மான திட்டங்கள், சூரிய மின் உற்பத்தி என மொத்த மின் தொடர் அமைப்பு திட்டங்களுக்காக 2019-20-ம் ஆண்டிற்கு ரூ.180.45 கோடி, 2020-21-ம் ஆண்டிற்கு ரூ.285.33 கோடி, 2022-2023-ம் ஆண்டிற்கு ரூ.294.89 கோடி என மொத்தம் ரூ. 760.67 கோடி செலவிட உத்தேசித்துள்ளது.

Next Story