பெங்களூருவில் ஓசூர் ரோடு உள்பட 3 இடங்களில் பெரிய மார்க்கெட்டுகள்


பெங்களூருவில் ஓசூர் ரோடு உள்பட 3 இடங்களில் பெரிய மார்க்கெட்டுகள்
x
தினத்தந்தி 5 Oct 2018 12:18 AM GMT (Updated: 5 Oct 2018 12:18 AM GMT)

பெங்களூருவில் ஓசூர் ரோடு உள்பட 3 இடங்களில் பெரிய மார்க்கெட்டுகள் நிறுவப்படும் என்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் தெரிவித்தார்.

பெங்களூரு,

பெங்களூருவில் உள்ள சிட்டி மார்க்கெட்டில் நேற்று துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் ஆய்வு செய்தார். மேலும் அங்கு கடைஅமைத்துள்ள வியாபாரிகளிடம் அவர் குறைகளை கேட்டறிந்தார். அதன் பிறகு அவர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

இந்த சிட்டி மார்க்கெட் கட்டப்பட்டு 100 ஆண்டுகள் ஆகிறது. இங்கு மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதை தடுக்கும் பொருட்டு, சிட்டி மார்க்கெட்டை போல் துமகூரு ரோடு, மைசூரு ரோடு, ஓசூர் ரோடு ஆகிய 3 இடங்களில் பெரிய மார்க்கெட்டுகளை அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்காக பட்ஜெட்டில் நிதி ஒதுக்கப்படும். இதுபற்றி பெங்களூரு மாநகராட்சி அதிகாரிகளுடன் கலந்து ஆலோசிக்கப்படும். மாநகராட்சி மன்ற கூட்டத்தில் ஒப்புதல் பெற்று இந்த மார்க்கெட்டுகள் நிறுவப்படும். இந்த சிட்டி மார்க்கெட்டில் எத்தனை கடைகள் உள்ளன, எவ்வளவு வருமானம் உள்ளது, வியாபாரிகளில் யார்-யார் வாடகை செலுத்தவில்லை என்ற விவரங்கள் அதிகாரிகளிடம் இல்லை. இதுகுறித்து எனக்கு அதிகளவில் புகார்கள் வந்துள்ளன.

இந்த மார்க்கெட்டில் உள்ள கட்டிடத்தின் மேல் மாடியில் வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கப்பட்டு உள்ளன. ஆனால் அங்கு கடை ஒதுக்கீடு பெற்றவர்கள், சாலையின் ஓரத்திேலயே கடைகளை விரித்து வியாபாரம் செய்கிறார்கள். அந்த மேல்மாடியில் கந்து வட்டி தொழில் நடக்கிறது. இதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாநகர போலீஸ் கமிஷனருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

இவ்வாறு பரமேஸ்வர் கூறினார். 

Next Story