திருச்செந்தூர், கோவில்பட்டி பகுதியில் பலத்த மழை 2 வீடுகள் இடிந்தன; 5 பேர் உயிர் தப்பினர்
திருச்செந்தூர், கோவில்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. எட்டயபுரத்தில் இடிந்த வீட்டில் தூங்கி கொண்டிருந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
திருச்செந்தூர்,
திருச்செந்தூர், கோவில்பட்டி பகுதியில் பலத்த மழை பெய்தது. இதில் 2 வீடுகள் இடிந்து விழுந்தன. எட்டயபுரத்தில் இடிந்த வீட்டில் தூங்கி கொண்டிருந்த 5 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
பலத்த மழைதிருச்செந்தூர், காயல்பட்டினம், ஆறுமுகநேரி, தென்திருப்பேரை, ஆழ்வார்திருநகரி, குரும்பூர் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று அதிகாலையில் பலத்த மழை பெய்தது. சுமார் 2 மணி நேரம் நீடித்த மழையால் சாலைகள், தெருக்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தொடர்ந்து மேகமூட்டமாகவும், அவ்வப்போது சாரல் மழையும் பெய்தது.
எட்டயபுரத்தில் நேற்று முன்தினம் இரவில் பலத்த மழை சுமார் அரை மணி நேரம் பெய்தது. பின்னர் சாரல் மழை விட்டு விட்டு பெய்தது. கோவில்பட்டி, விளாத்திகுளம், கழுகுமலை, கயத்தாறு உள்ளிட்ட பகுதிகளில் அதிகாலையில் சாரல் மழை பெய்தது. பகலில் மேகமூட்டமாக இருந்தது.
2 வீடுகள் இடிந்தனஎட்டயபுரம் நடுவிற்பட்டியைச் சேர்ந்தவர் மாரியப்பன் (வயது 75). இவர் நேற்று முன்தினம் இரவில் தன்னுடைய குடும்பத்தினருடன் வீட்டில் தூங்கினார். அப்போது பெய்த பலத்த மழையின் காரணமாக, வீட்டின் மேற்கு பகுதியில் உள்ள சுவர் திடீரென்று இடிந்து, வெளிப்புறமாக விழுந்தது. இதனால் வீட்டில் தூங்கி கொண்டிருந்த மாரியப்பன் குடும்பத்தினர் 5 பேரும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். சேதம் அடைந்த வீட்டை எட்டயபுரம் தாசில்தார் வதனாள் பார்வையிட்டார். பின்னர் அவர், மாரியப்பனுக்கு ரூ.4,500 நிவாரண உதவித்தொகை வழங்கினார்.
கோவில்பட்டி முகமதுசாலிஹாபுரத்தைச் சேர்ந்தவர் ஷேக் மதார் (50). மாற்றுத்திறனாளி. இவரது ஓட்டு வீடு பழுதடைந்த நிலையில் இருந்தது. எனவே ஷேக் மதார் தன்னுடைய குடும்பத்தினருடன், அருகில் உள்ள உறவினரின் வீட்டில் வசித்து வருகிறார். நேற்று அதிகாலையில் மழை பெய்தபோது, அந்த வீட்டின் மேற்கூரை திடீரென்று இடிந்து விழுந்தது. அப்போது அங்கு யாரும் வசிக்காததால், உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.