தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம் தீவிரம்


தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம் தீவிரம்
x
தினத்தந்தி 6 Oct 2018 4:00 AM IST (Updated: 6 Oct 2018 1:30 AM IST)
t-max-icont-min-icon

தேர்வு கட்டண உயர்வை ரத்து செய்யக்கோரி குமரி மாவட்டத்தில் கல்லூரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது.

நாகர்கோவில்,

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்துக்கு உட்பட்ட கல்லூரிகளில் தேர்வு கட்டணம் உயர்த்தப்பட்டதை கண்டித்தும், உயர்த்தப்பட்ட கட்டணத்தை ரத்து செய்யக்கோரியும், தமிழில் தேர்வு எழுத அனுமதிக்க வலியுறுத்தியும் கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவ-மாணவிகள் கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டம், வகுப்பு புறக்கணிப்பு மற்றும் உள்ளிருப்பு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள்.

இந்தநிலையில் நேற்று நாகர்கோவில் இந்து கல்லூரி மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி முன்பு போராட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. பின்னர் கல்லூரியில் இருந்து செட்டிக்குளம் சந்திப்பு வழியாக மாணவ, மாணவிகள் கலெக்டர் அலுவலகத்துக்கு ஊர்வலமாக சென்றனர்.

கலெக்டர் அலுவலகம் வந்ததும் அனைவரும் கலெக்டரிடம் மனு கொடுக்க உள்ளே செல்ல முயன்றனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் அனைவரையும் உள்ளே அனுமதிக்கவில்லை. மாணவர்கள் சார்பில் 5 பேர் மட்டுமே கலெக்டரை சந்தித்து மனு கொடுக்கலாம், மற்றவர்கள் கலைந்து செல்லுமாறு கூறினர். இதனால் அங்கு திடீர் பரபரப்பு நிலவியது. இதையடுத்து இந்திய மாணவர் சங்க மாவட்ட தலைவர் பதில்சிங் தலைமையில் 5 மாணவ-மாணவிகள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர். மற்ற மாணவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதேபோல் நேற்று மார்த்தாண்டம் நேசமணி நினைவு கல்லூரி உள்ளிட்ட சில கல்லூரிகளிலும் மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வு கட்டணத்தை ரத்து செய்யக்கோரி கல்லூரி மாணவர்கள் போராட்டம் தீவிரமடைந்து வருவதாக இந்திய மாணவர் சங்க மாவட்ட செயலாளர் ஜெசின் கூறினார்.
1 More update

Next Story